தேர்வு முடியும் வரை மின்தடை நேரத்தை மாற்ற கோரிக்கை
தேர்வு முடியும் வரை மின்தடை நேரத்தை மாற்ற கோரிக்கை
UPDATED : செப் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடையால் காலாண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனால், மின்தடை நேரத்தை மின்வாரிய அதிகாரிகள் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஐந்து மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை அமல் படுத்தப்பட்டது.
கடந்த வாரம் காற்றாலை மூலம் கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட்டதால், இந்த மின்தடை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. மின்தட்டுப்பாடு பிரச்னை ஓய்ந்துவிட்டதாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பல இடங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுகிறது. பள்ளிகளில் கடந்த 11ம் தேதி துவங்கிய காலாண்டு தேர்வுகளுக்காக மாணவர்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் படிப்பதை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த தேர்வுகள் வரும் 23ம் தேதி வரை நடக்கின்றன.
ஆனால், பெரும்பாலான இடங்களில் அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரையும், அதே போல இரவு 7 மணிமுதல் 10 மணிவரையும் இடைவெளிவிட்டு மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மாணவர்கள் டியூஷன் செல்ல முடியவில்லை.
இப்பிரச்னையை கருத்தில் கொண்டு காலாண்டு தேர்வு முடியும் வரை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செய்யப்படும் மின்தடை நேரத்தில் மின்வாரிய அதிகாரிகள் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
