தேர்தல் கமிஷன் உத்தரவால் கிராமப்புற பள்ளிகளுக்கு விடிவு காலம்
தேர்தல் கமிஷன் உத்தரவால் கிராமப்புற பள்ளிகளுக்கு விடிவு காலம்
UPDATED : செப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ள பள்ளிகள், உள்ளாட்சி அலுவலகங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’ என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, அனைத்து கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிராமப்புறங்களில் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்கள், இரண்டு நாட்கள் வரை ஓட்டுச்சாவடிகளில் தங்க வேண்டியுள்ளது. ஆனால், ஓட்டு சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதில்லை; பெண் ஊழியர்கள் நிலை மிகவும் பரிதாபம்.
எனவே, ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். துவக்க, நடுநிலைப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்கம், உள்ளாட்சி அலுவலகங்களில், ஊரக மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழ், இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊனமுற்றோருக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகளில் சறுக்குப்பாதை அமைக்க வேண்டும். இப்பணிகளை, வரும் லோக்சபாத் தேர்தலுக்கு முன் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு நரேஷ்குப்தா உத்தரவிட்டுள்ளார்.
பெரும்பான்மையான கிராமப்புற பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. ஏற்கனவே இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், படிக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் நிலையே உள்ளது. தேர்தல் கமிஷன் உத்தரவு மூலம், கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை தேவைகளுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
