UPDATED : ஜன 24, 2012 12:00 AM
ADDED : ஜன 24, 2012 11:17 AM
பொதுவாக 5 வயதுக் குழந்தைகளுக்கு வகுப்பறை கற்பித்தல் வேண்டாம் என்பதே கல்வியாளர்களின் கருத்தாகும். ஆனால், அதை ஏற்கும் நிலையில் யாரும் இல்லை. அதனால், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையை எவ்வாறு மாற்றலாம் என்று மட்டுமே கூற முடியும்.
ஒன்று, இரண்டு என வெறும் எழுத்து வடிவங்களை மட்டுமே கற்பிக்கும் முறை மாறி, ஒன்று என்பதன் மதிப்பு என்னவென்று தெளிவாகவும், ஆழமாகவும் கற்பிக்கும் முறை கொண்டு வர வேண்டும்.
முந்தைய காலத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டதை விட அதிகமான பாடங்கள் தற்போது கற்பிக்கப்படுகிறது. இது கல்வியின் முன்னேற்றத்திற்கான அறிகுறியா? இல்லை.
முந்தைய காலத்தில் பிள்ளைகளுக்கு 2 விஷயங்களை அவர்களது தாய் மொழியில் கற்றுக் கொடுத்தால், அவர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட விஷயத்திற்கு தொடர்பான 100 விஷயங்களைப் பற்றி சிந்தித்து, 200 விஷயங்களை தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள். ஆனால், தற்போது நாம் 200 விஷயங்களை ஆங்கிலத்திலும், பிற மொழியிலும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து விடுகிறோம். இதனால் அவர்கள் அதில் 200 விஷயங்களைக் கூட கவனிப்பதில்லை, 2 விஷயங்களைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
இல்லையே, என் குழந்தை புத்திசாலி, பள்ளியில் கற்றுத் தரும் எல்லாவற்றையும் நன்றாக படிக்கிறான், சொல்கிறான் என்று சொல்லும் பெற்றோர்களே.. நீங்கள் ஒன்றாம் வகுப்பில் படித்த திருக்குறளை இப்போது கேட்டாலும் சொல்வீர்கள், அர்த்தத்துடன். ஆனால் யுகேஜியில் சொல்லிக் கொடுத்த ஒரு வார்த்தைக்கு அர்த்தத்தையோ, வாய்ப்பாட்டையோ ஒன்றாம் வகுப்புப் படிக்கும் பிள்ளையைக் கேட்டால் அவர்களுக்கு அது ஞாபகத்தில் இருப்பதில்லை.
பள்ளியில் கற்றுத் தரும் பாடத்தை, நமது குழந்தைகள் அவர்களது அதீத ஆற்றலால் படித்து மதிப்பெண் வாங்கி விடுகிறார்கள். ஆனால் அதன் மீது அவர்களுக்கு சிந்திக்கும் திறனோ, அதைப் பற்றி கேள்வி கேட்கும் திறனோ வளர்வதில்லை, பல விஷயங்கள் அவர்களது மனதில் பதியாமலேயேப் போய்விடுகின்றன.
அவ்வாறு இல்லாமல், குறைந்த பாடங்களாக இருந்தாலும், குழந்தைகளுக்கு புரியும் வகையிலும், எளிமையாகவும் கற்றுக் கொடுக்கும் பாட முறைகள் மாற்றப்பட வேண்டும். ஏராளமான பக்கங்களைக் கொண்டதாக இல்லாமல், ஆழமான விஷயங்களைக் கொண்ட புத்தகங்களாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வகுப்புப் புத்தகங்கள் மாற்றப்பட வேண்டும்.
மேலும், ஓடி விளையாட வேண்டிய குழந்தைகளுக்கு, வீட்டுப் பாடம் என்று சொல்லி அதிகமான சுமைகளை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். பள்ளியில் இருந்து வரும் குழந்தை உடனடியாக வீட்டுப் பாடம் செய்ய தயாராவதற்கு மட்டுமே பெற்றோர் நேரம் ஒதுக்குகின்றனர். பின்னர் இவர்களது உடலும், மனதும் களைத்து விளையாட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதவதும், பாரதியாரின் ஓடி விளையாடு பாப்பா பாடலை பாடுவது மட்டுமே செய்யும் குழந்தையாகிவிடுகின்றனர்.
இதில்லாமல், வீட்டுப் பாடச் சுமையை குழந்தைகளுக்குக் குறைவாக கொடுப்பதும், சிறு குழந்தைகளுக்கும் டியூஷன் என்ற கூடுதல் நேர வகுப்புகளை நடத்துவதையும் பள்ளிகள் தவிர்க்கலாம்.
பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் பெற்றோர் முதலில் பார்ப்பது பள்ளி அமைந்துள்ள இடம், பள்ளிக் கட்டடம், போக்குவரத்து வசதிகள் ஆகியவைதான். ஆனால் இவை யாவும் தரமான கல்வியை அளிக்க முடியாது.
பள்ளியில் அளிக்கப்படும் கல்வியை, அங்கு பயிலும், மாணவ, மாணவியரையும், அவர்களது பெற்றோரையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி குறித்தும் ஆராய்ந்து தெரிந்து கொள்வது நல்லது.
