தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நர்சிங் மாணவ-மாணவியர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு

நர்சிங் மாணவ-மாணவியர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு

நர்சிங் மாணவ-மாணவியர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு


UPDATED : ஜன 25, 2012 12:00 AM

ADDED : ஜன 25, 2012 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2012 12:00 AM ADDED : ஜன 25, 2012 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: செவிலியர் பட்டயம் முடித்தவர்கள் மற்றும் நர்சிங் மாணவ, மாணவியர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நர்சிங் மாணவியர், பெண் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழகத்தில் செவிலியர் பட்டப்படிப்பு முடித்த, 1,891 பேர் அரசு வேலைக்காக விண்ணப்பித்தனர். 2010ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 989 பேர் மட்டும் பணிவாய்ப்பு பெற்றனர். மீதமிருந்த 892 பேர் அரசுப் பணிக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், மருத்துவர் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், புதிய செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, அரசு கல்லூரிகள் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் செவிலியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கும் பணி வாய்ப்பு உண்டு என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 300 பேர், சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டதால் கைதாகினர்.

மீண்டும் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், புதிய அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனைகளில் உள்ள பயிற்சி செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மாணவியர்கள் 495 பேர், காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, சாலை மறியல் மற்றும் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர். நான்கு மணி நேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்ததால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவியர் மயங்கி விழுந்தனர். மாணவியருடன், சென்னை மருத்துவமனை முதல்வர் கனகசபை, பேச்சு நடத்தினார்; அது தோல்வியடைந்தது. மாணவியரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி, கொண்டித்தோப்பில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். மதிய வேளையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருவரை போலீசார் கைது செய்தனர். மறியலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்ததைத் தொடர்ந்து, 300க்கும் மேற்பட்ட பயிற்சி செவிலியர்கள், மருத்துவமனைக்குள்ளேயே கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. கைது செய்யப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டாலும், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிடவில்லை. அரசாணையை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டம் எனக் கூறி தொடர்ந்தனர். அவர்களுடன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். இரண்டு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, செவிலியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

தனியார் கல்லூரியில் படித்த, செவிலியர் சங்கத் தலைவர் செந்தில்நாதன் கூறும்போது, "அரசியல் உள்நோக்கம் உள்ள அரசு செவிலியர்கள் சங்கம், அரசு கல்லூரியில் படிக்கும் செவிலிய மாணவியரை தூண்டிவிட்டுள்ளனர். கோர்ட் அளித்த தீர்ப்பை மட்டுமே அரசு செயல்படுத்தி உள்ளது. புதிதாக எந்த ஆணையும் அரசு வெளியிடவில்லை. தனியார் கல்லூரிகளுக்கும், அரசு கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகம், பாடத்திட்டம், தேர்வு முறைகள் என அனைத்தும் ஒன்றுதான். தனியொரு விதிகள் ஏதும் இல்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us