‘பவளப்பாறை காலநிலையின் மாற்றத்தை உணர்த்தும் காரணி’
‘பவளப்பாறை காலநிலையின் மாற்றத்தை உணர்த்தும் காரணி’
UPDATED : செப் 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தூத்துக்குடி: ‘கடலிலுள்ள பவளப்பாறைகள் காலநிலையின் மாற்றத்தை உணர்த்தும் சிறந்த காரணிகள்’ என தேசிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மீன் வளக்கல்லூரியில், பவளப்பாறைகளின் வாழ்விடம் குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு செப்., 18ம் தேதி துவங்கியது.
கருத்தரங்கில் மன்னார் வளைகுடா தேசிய உயிர்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் மெல்கானி பேசியதாவது:
பவளப்பாறைகள்தான் கடலின் உண்மையான வனப்பகுதிகள் ஆகும். அவை கடல் உயிரின வளர்ப்பு, பாதுகாப்பிற்கு மிக முக்கியமாக விளங்குகின்றன. கடலின் மொத்த பரப்பளவில் 0.2 சதவீத பவளப்பாறைகள் மட்டுமே உள்ளன. ஆனால் அவை 25 சதவீதம் அளவு கடல் உயிரினங்களை காக்கின்றன. பவளப்பாறைகள் இயற்கையின் அழகிய படைப்பாகும். அவை மருந்துப்பொருளாகவும், அழகுப்பொருளாகவும் பயன்படுகிறது. சிலர் அதை சட்டவிரோதமாக வெட்டி கடத்துகின்றனர். பவளப்பாறைகள் இல்லாமல் கடலில் மீன்வளம் கிடையாது.
பவளப்பாறைகள் காலநிலை மாற்றத்தை உணர்த்தும் சிறந்த காரணிகளாகும். உலகில் மொத்தம் 109 நாடுகளில் உள்ள பவளப்பாறைகளில் 93 நாடுகளில் அவைகள் அபாய கட்டத்தில் உள்ளன. இயற்கை மாற்றங்கள் மற்றும் மனிதர்கள் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கும் செயலே அவற்றிக்கு காரணம். பவளப்பாறைகள் இழப்பை எதனாலும் ஈடுகட்ட முடியாது. எனவே இந்த ஆண்டு பவளப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக நாம் பவளப்பாறைகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.
மீன்வளக்கல்லூரி முதல்வர் வெங்கட ரமணி தலைமை வகித்தார். கேரள அரசின் மீன்வளத்துறை ஆலோசகர் மதுசூதன குருப், பேராசிரியர்கள், ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
