எஸ்.ஆர்.எம் பல்கலை மையம் பழைய விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு
எஸ்.ஆர்.எம் பல்கலை மையம் பழைய விதிமுறைகளை பின்பற்ற உத்தரவு
UPDATED : ஜன 27, 2012 12:00 AM
ADDED : ஜன 27, 2012 01:28 PM
சென்னை: திருச்சியில், எஸ்.ஆர்.எம்., பல்கலை மையம் துவங்குவதற்கு, விண்ணப்பம் அளித்த தேதியில் இருந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும், என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில், எஸ்.ஆர்.எம்., பல்கலையின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மையங்களை துவங்குவதற்கு, 2010ம் ஆண்டு யு.ஜி.சி., விதிமுறைகளின்படி விண்ணப்பிக்குமாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த ஐகோர்ட் தனி நீதிபதி, "மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்தார். 2010ம் ஆண்டுக்கு முன்பு இருந்த வழிமுறைகளின்படி, பல்கலை மையங்கள் துவங்கும் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். கடந்த ஆண்டு மார்ச்சில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்பீல் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு:
யு.ஜி.சி., தரப்பில், 2009ம் ஆண்டு செப்டம்பரில் ஒப்புதல் அளிக்கப்பட்டும், அந்த ஒப்புதலின்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், 2010ம் ஆண்டு ஜூன் வரை செயல்படவில்லை. நிலுவையில் இந்தப் பிரச்னை இருந்துள்ளது. 2010ம் ஆண்டு புதிய விதிமுறைகள் வந்தபின், அதன்படி மாற்றியமைக்கும்படி, எஸ்.ஆர்.எம்.,க்கு உத்தரவிடப்பட்டது.
யு.ஜி.சி., சட்டத்தில், முன்தேதியிட்டு அமல்படுத்த அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட விதிமுறைகள் பொருந்தக்கூடியவர்களை பாதிக்கும் வகையில், அந்த விதிமுறைகளை முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது.
யு.ஜி.சி., சட்டம் மற்றும் விதிமுறைகளை பார்க்கும்போது, 2010ம் ஆண்டு விதிமுறைகளை, பின் தேதிகளில்தான் அமல்படுத்த முடியும். முன்தேதியில் அமல்படுத்த முடியாது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. அப்பீல் மனுவில் தகுதியில்லை. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.
