தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலையின் புது விதிகளால் மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பு

பல்கலையின் புது விதிகளால் மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பு

பல்கலையின் புது விதிகளால் மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பு


UPDATED : ஜன 30, 2012 12:00 AM

ADDED : ஜன 30, 2012 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 30, 2012 12:00 AM ADDED : ஜன 30, 2012 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள் எத்தனை பாடத்தில் நாம் தேர்ச்சி பெறுவோம் எந்தெந்த பாடங்களை எழுதுவது எனத் தெரியாமல் முதலாம் ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

தேர்வு முடிவுகளை திருத்தி வெளியிடாமல் அடுத்த தேர்வு நடப்பதால் புதிய தேர்வை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பல் மருத்துவப் படிப்பு உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மருத்துவ கவுன்சில் விதிகளின் படி தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் தன்னிச்சையாக பல புதிய விதிகளை உருவாக்கி அதன் அடிப்படையில் முதலாம் ஆண்டுக்கு தேர்வுகளை நடத்தியது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் தோல்வியடைந்தனர்.

புதிய விதிகளால், மருத்துவ படிப்புகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. புதிய விதிகளை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் தேர்வுத் தாள்களை மதிப்பிட மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றுமாறு பல்கலைக்கழகத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை ஏற்றுக் கொண்ட பல்கலைக்கழகம், தேர்வு முடிவுகளை திருத்தி புதிய முடிவுகளை வெளியிட்டது.

இந்த தேர்வு முடிவுகளும் மாணவர்களுக்கு பாதகமாக அமைந்தன. இது குறித்து பல் மருத்துவ மாணவர் ரமேஷ் கூறும்போது, "மருத்துவ கவுன்சில் விதிப்படி ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற எழுத்துத்தேர்வு, வாய்மொழித் தேர்வு, உள்மதிப்பீட்டுத் தேர்வு என இந்த மூன்றின் கூட்டுத் தொகையில் 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்".

இதில், ஒவ்வொரு தேர்விலும் தனித்தனியாக 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும் என பல்கலைக் கழகம் புதிய விதியை அறிமுகப்படுத்தியது. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்ற கோர்ட் உத்தரவிட்டது.

பல்கலைக் கழகமோ, மூன்று பாடங்களிலும் எடுத்த மதிப்பெண்களின் கூட்டு தொகையில் 50 சதவீதம் என்ற விதியை மட்டும் எடுத்து கொண்டு எழுத்துத் தேர்வில் மொத்த மதிப்பெண் 100 என்பதை 70 ஆக குறைத்து அதன் அடிப்படையில் மாணவர்கள் ஏற்கனவே 100க்கு பெற்ற மதிப்பெண்களை 70க்கு குறைத்து கணக்கிட்டது.

வாய்மொழித் தேர்வில் மொத்த மதிப்பெண் 100 என்பது 20 ஆக குறைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் 100க்கு பெற்ற மதிப்பெண்கள் 20க்கு எவ்வளவு என்ற அளவில் கணக்கிடப்பட்டன. இதுபோன்ற உள்மதிப்பீட்டுத் தேர்விலும் மொத்த மதிப்பெண் 10ஆக குறைக்கப்பட்டது.

இவ்வாறு குறைக்கப்பட்டதால், 3 தேர்வுகளின் மொத்த மதிப்பெண் கூட்டுத் தொகை 100ல் ஒரு மாணவன் தேர்ச்சி பெற 50 மதிப்பெண் பெற வேண்டும். இது பல்கலைக் கழகம் முதலில் அறிமுகப்படுத்திய புதிய விதியை போன்றது தான். இதன் மூலம் மாணவர்களையும் கோர்ட்டையும் ஏமாற்ற பல்கலைக் கழக நிர்வாகம் முயற்சிக்கிறது. இவ்வாறு மாணவர் ரமேஷ் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., மாணவர் ஆதி கூறும்போது, "எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு படிப்புக்கும் இதைப்போன்று மொத்த மதிப்பெண்களை குறைத்து அதன் அடிப்படையில் தேர்ச்சி கணக்கிடப்பட்டுள்ளதால் முதலில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட இப்போது தேர்ச்சி பெற முடியவில்லை" என்றார்.

பல்கலைக் கழகத்தின் இந்த குளறுபடிகளை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 19 கடைசி தேதி என, பல்கலைக் கழகம் அறிவித்தது. வழக்கு முடியும் வரை, அடுத்த தேர்வை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் வலியுறுத்தியும், பல்கலைக் கழகம் செவிசாய்க்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் அடுத்த தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடக்கும் என, பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அனுமதி சீட்டுகளை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ள மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோர்ட் முடிவு தெரியாமல், எந்தெந்த பாடத்துக்குத் தேர்வு எழுத விண்ணப்பிப்பது என தெரியாமல் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மாணவர் ஒருவரின் தந்தை குமார் கூறும்போது,  "பல் மருத்துவ மாணவர்களுடன் இணைந்து, பெற்றோர்களும் போராட உள்ளோம். பிப்ரவரி 1ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், பிப்., 1ம் தேதி துவங்கும் தேர்வு முடிவுகளை புறக்கணிப்பதைத் தவிர வேறுவழியில்லை" என்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us