உயர்கல்வி ஆய்வுக்கு மத்திய அரசு ரூ.3,000 கோடி உதவி
உயர்கல்வி ஆய்வுக்கு மத்திய அரசு ரூ.3,000 கோடி உதவி
UPDATED : செப் 19, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: உயர்கல்வி துறையில், குறிப்பாக அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செப்., 18ம் தேதி நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டிக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, 11வது ஐந்தாவது திட்டத்தின் போது கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு இதில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தேசிய கல்வி உதவி தொகை திட்டத்தின்கீழ் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்கள் படிப்பு முடியும் வரை கல்வி உதவி தொகையை நீட்டிக்க செய்வதற்கான திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஏழை வகுப்பை சேர்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தங்கள் மேல்படிப்பு படிக்க உதவும். இத்திட்டம் 2008-09ம் ஆண்டு முதல், செயல்பட துவங்கும் என்று மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் நிருபர்களிடம் கூறினார்.
இதை தவிர, உயர் கல்வியில் கல்வி உதவி தொகை மற்றும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கான கல்வி திட்டம் ஆகியவற்றுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
