மாதம் ரூ.500 உதவித்தொகை பெற மாணவ, மாணவியருக்கு சிறப்பு தேர்வு
மாதம் ரூ.500 உதவித்தொகை பெற மாணவ, மாணவியருக்கு சிறப்பு தேர்வு
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை அரசு தேர்வு இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நவ., 16ம் தேதி தேர்வு நடத்தப்படும்.
இத்திட்டத்தில் உதவித்தொகை பெற 2007-08 கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்று (எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 50 சதவீத மதிப்பெண்) 2008-09ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பில் மத்திய, மாநில அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பயில்பவராக இருக்க வேண்டும்.
அவர்களுடைய பெற்றோர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
தாங்கள் பயிலும் பள்ளி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 16ம் தேதி நடக்கும் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீதம் மதிப்பெண்(எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 32 சதவீதம் மார்க்) பெறும் மாணவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு மாதம் 500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6,000 ரூபாய் என ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பு உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை பெறும் மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ்1 பள்ளி ஆண்டு தேர்வில் 55 சதவீத மதிப்பெண், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களும் (எஸ்.சி.,எஸ்.டி மாணவர்களுக்கு 5 சதவீதம் சலுகை) பெற்றால் தான் இத்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
இத்திட்டத்தில் தமிழகத்தில் மொத்தம் 6,695 மாணவ, மாணவியருக்குப் படிப்பு உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு, சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் (அப்ஜெக்ட்டிவ்) முறையில் நடத்தப்படும். இரு தொகுதிகளைக் கொண்டதாக ஒவ்வொரு தொகுதியிலும் 90 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள், முதன்மை மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். ஜெராக்ஸ் எடுத்துப் பயன்படுத்தலாம். தேர்வுக் கட்டணம் 50 ரூபாய்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 29ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
