தனியார் பல்கலை., ஆராய்ச்சி பட்டம் அரசு வேலைக்கு செல்லாது?
தனியார் பல்கலை., ஆராய்ச்சி பட்டம் அரசு வேலைக்கு செல்லாது?
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தனியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் பெறப்படும் எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள், தமிழக அரசின் பணியிடங்களில் சேர தகுதியற்றவை என அறிவிக்கும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளது.
தமிழகத்தில் 22 தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இப்பல்கலைக் கழகங்களில் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலமாகவும் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுடன், எம்.பில்., உள்ளிட்ட படிப்புகளும் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஒரு சில தனியார் பல்கலைக்கழகங்களில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், போதிய ஆசிரியர்கள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பெருமளவிலான மாணவர்களை சேர்த்து வருகின்றன. முறையாக தேர்வுகளை நடத்தாமல், பட்டங்களையும் வழங்கி வருகின்றன.
ஆராய்ச்சிப் படிப்புகளாக எம்.பில்., பிஎச்.டி., படிப்புகளை தொலைதூர கல்வித் திட்டத்தில் வழங்கும்போது, போதிய அளவில் ‘கைடு’கள் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தனியார் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் தொலைதூரப் படிப்புகளின் தரம் குறைவாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.
எனவே, தனியார் பல்கலைக் கழக தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் பெறப்படும் எம்.பில்., பிஎச்.டி., பட்டங்கள், தமிழக அரசின் பணியிடங்களில் சேர தகுதியற்றவை என விரைவில் சட்டம் இயற்றப்படுகிறது. சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில், உயர்கல்வித் துறை செயலர் கணேசன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
