UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு கடந்த பிப்ரவரி மாதம் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியது.
இதையடுத்து, வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, செப். 24ம் தேதி பல்கலைக்கழகம் உதயமாகியது. வேல்ஸ் கல்வி குழுமத்தின் ஆறு பிரிவுகள் புதிதாக துவக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட உள்ளன.
பல்கலைக்கழக துவக்க விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் வரவேற்றார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மீர்முஸ் தபா உசேன் வாழ்த்துரை வழங்கி பேசினார்.
புதிய பல்கலை கழகத்தை துவக்கி வைத்து, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பேசுகையில், ‘நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 247 பல்கலைக்கழகங்களும், 98 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் மட்டுமே உள்ளன. எனவே, இங்கு கூடுதல் கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்க்கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்கள் வேலை தேடி அலைபவர்களாக இல்லாமல், பலருக்கு வேலை தருபவர்களாக மாற வேண்டும்.’ என்றார்.
