UPDATED : செப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்தியாவின் தலை சிறந்த சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம். இது சமீபத்தில் தனது ஐதராபாத், புனே, விசாகப்பட்டினம் மையங்களில் பணி புரிந்து வந்த 400 இன்ஜினியர்கள் மற்றும் அசோசியேட்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இது அந்த ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெளியேற்றப்பட்டவர்களில் பலரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சத்யம் நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் சத்யம் நிறுவனத்தின் ‘எஸ்‘ பேண்டு பிரிவைச் சேர்ந்த இந்த ஊழியர்களின் பணி நீக்கம் இ-மெயில் மூலமாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அசோசியேட் என்னும் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாகவே புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாததால் பணியற்றே இருந்து வந்தனர்.
உலகப் பொருளாதார மந்த நிலையால் சத்யம் நிறுவனம் சாதாரணமாகப் பெறும் புதிய திட்டப் பணிகள் எதுவும் அதற்கு சமீப காலமாக கிடைக்கவில்லை. இதனால் பல ஊழியர்களுக்கு பணியில்லாத நிலை ஏற்பட்டது.
இவர்கள் சத்யம் நிறுவனத்தோடு ஒப்பந்த அடிப்படையில் பணிகளைச் செய்து தரும் நிறுவனங்களுக்கு செல்லலாம் என்றும் அல்லது பணியிலிருந்து அவர்களே விலகிச் செல்லலாம் என்றும் சமீப காலமாகவே சத்யம் எச்சரித்து வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
