UPDATED : செப் 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளைக் கவனிப்பதற்காக, மூன்றுகட்ட சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தொடக்கக் கல்வித்துறையில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுடைய சாதாரண பிரச்னைகள் கூட கீழ்மட்ட அளவில் தீர்க்கப்படாததால் பல பேர், சென்னையில் உள்ள இயக்குனர் அலுவலகத்திற்கு கூட்டம் கூட்டமாகப் படையெடுக்கின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
ஆசிரியர்களின் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் பொறுமையாகக் கேட்டு, அதில் முடிந்தவரை தீர்த்துவைக்க வேண்டும் என்பதற்காக, மூன்றுகட்ட சிறப்புக் கூட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மாதத்தின் முதல் சனிக்கிழமை அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும், மூன்றாவது சனிக்கிழமை இயக்குனர் அலுவலகத்திலும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
ஆசிரியர்களின் விடுமுறை சரண்டர், முன்பணம் பெறுவதற்கான மனு மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் கீழ்மட்ட அளவிலேயே உடனுக்குடன் தீர்த்துவைக்க வேண்டும். கூட்டம் நடைபெறும் நாளன்று அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கே அலுவலகம் வர வேண்டும்.
ஆசிரியர்கள் கொடுக்கும் விண்ணப்படிவங்களை கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை நிராகரித்தால், அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும்.
சிறப்புக் கூட்டங்களுக்கு ஆசிரியர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் வந்து விண்ணப்பம் அளிக்கலாம். அதிகாரிகள் தங்களது அதிகார வரம்புக்கு உட்பட்ட விண்ணப்பங்களின் மீது தாங்களே முடிவு எடுத்து செயல்படுத்த வேண்டும்.
இயக்குனர் அலுவலகம் சென்றால் தான் பிரச்னை தீரும் என்ற பட்சத்தில், சம்மந்தபட்ட மனுக்களை இயக்குனர் அலுவலகத்திற்கு மேல்பரிந்துரை செய்து அனுப்பி வைக்கலாம் என, இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “முதல்கட்ட சிறப்புக் கூட்டங்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. பெரும்பாலான மனுக்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் பல்வேறு சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தேன். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளனர். அவை பரிசீலனை செய்யப்படும். இந்த சிறப்புக் கூட்டங்கள் மாதந்தோறும் நடத்தப்படும்,” என்றார்.
