ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்களிடம் ஆர்வம் அதிகரிப்பு
UPDATED : அக் 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஐ.ஐ.எம்., நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான சி.ஏ.டி., (கேட்) தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டு 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐ.ஐ.எம்.,களிலும், இதர முன்னணி வர்த்தக பள்ளிகளிலும் இடம் கிடைக்க வேண்டும் எனில், இந்த பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.
இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 16ம் தேதி நடக்கிறது. ஐ.ஐ.எம்., நிறுவனங்கள் மட்டுமின்றி, அவை சாரா 116 நிறுவனங்களும், கேட் 2008 மூலமாக தங்கள் நிறுவனங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க உள்ளனர். இந்த நிறுவனங்களில் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இடங்கள் உள்ளன.
இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வுக்காக, நாட்டில் உள்ள ஏழு ஐ.ஐ.எம்.,களும் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன.
இது 2007ம் ஆண்டில், பெற்ற விண்ணப்பங்களின் அளவான 2 லட்சத்து 30 ஆயிரத்தை விட 26 சதவீதம் அதிகம். 2006ம் ஆண்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
லக்னோ ஐ.ஐ.எம்., நிறுவனத்தின் தலைவர் சாஜி நாயர் கூறியதாவது:
டில்லி மற்றும் லக்னோவை தேர்வு மையமாக தேர்வு செய்து 60 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெங்களூர், ஐதராபாத் மற்றும் புனேயை தங்களின் தேர்வு மையமாக தேர்வு செய்து 62 ஆயிரத்து 465 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
போபால், குர்கான், இந்தூர் மற்றும் நொய்டாவை தங்களின் தேர்வு மையமாக குறிப்பிட்டு, இந்தூர் ஐ.ஐ.எம்.,மில் 28 ஆயிரம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
இதன்மூலம், சராசரியாக தேர்வு எழுதும் ஒவ்வொரு 170 பேரிலும், ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர் ஐ.ஐ.எம்., நிறுவனத்தில் சேர உள்ளார். 4,000 முதல் 5,000 பேருக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். இவ்வாறு சாஜி நாயர் கூறினார்.
