மகாத்மா காந்தி குறித்த சிறப்பு தேர்வு: மாணவர்கள் ஆர்வம்
மகாத்மா காந்தி குறித்த சிறப்பு தேர்வு: மாணவர்கள் ஆர்வம்
UPDATED : அக் 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மும்பை: மகாராஷ்டிராவில் காந்தியின் கொள்கைகள் பற்றி நடத்தப்படும் சிறப்பு தேர்வில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்க துவங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவில், மகாத்மா காந்தி போதித்த அஹிம்சை கொள்கைகளை விளக்கும் வகையில், ஆண்டு தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ‘காந்தி அமைதி தேர்வு’ நடத்தப்படுகிறது.
இதில், தேர்வு பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த தேர்வை மும்பை சர்வோதயா மண்டல் நடத்தி வருகிறது. சமீபகாலமாக இந்த தேர்வை எழுதுவதில் மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுத துவங்கியுள்ளனர்.
சர்வோதயா மண்டல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சோமைய்யா கூறியதாவது:
தேர்வுக்கு தேவையான புத்தகங்களை நாங்களே மாணவர்களுக்கு கொடுத்து விடுகிறோம். கடந்த 2004ல் 12 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த ஆண்டு தேர்வுக்கு 30 ஆயிரம் மாணவர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். மேலும், 30 ஆயிரம் மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்.
காந்தியின் கொள்கைகள் இளைய தலைமுறைக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘முன்னாபாய்’ திரைப்படத்துக்கு இதில் முக்கிய பங்கு உண்டு.
அஹிம்சை கொள்கைகள், வயதானவர்களுக்கானது என நினைத்து வந்தனர். இந்த படம் வெளிவந்த பின், இளைஞர்களின் மனநிலையை மாற்றி விட்டது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை, காந்தி பிறந்த அக்டோபர் 2ந் தேதியை வன்முறை ஒழிப்பு தினமாக அறிவித்துள்ளதும், இதற்கு முக்கிய காரணம். இவ்வாறு சோமைய்யா கூறினார்.
