மட்கும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி: பாரதியார் பல்கலை முடிவு
மட்கும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி: பாரதியார் பல்கலை முடிவு
UPDATED : அக் 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: எளிதில் மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மைசூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் (டி.ஆர்.டி.ஓ.,) இருந்து பாரதியார் பல்கலை பெற்றுள்ளது.
மூன்று மாதங்களுக்குப் பின் பாரதியார் பல்கலையில், மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்படும்.
கோவை மாநகர பகுதிகளில் 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து பிளாஸ்டிக் பை உற்பத்தியாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது வழக்கு நிலுவையில் இருப்பதால் மாநகராட்சி நிர்வாகத்தால், பிளாஸ்டிக் தடையை அறிவித்தபடி செயல்படுத்த முடியவில்லை. இதனால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை உருவாக்க, கோவை பாரதியார் பல்கலை முடிவு செய்தது. முதல்கட்டமாக நாட்டிலுள்ள 64 டி.ஆர்.டி.ஓ., மையத்தில் ‘எளிதில் மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை உருவாக்கும் தொழில்நுட்பம் உள்ளதா’ என கேட்கப்பட்டது.
மைசூரில் உள்ள டி.ஆர்.டி.ஓ., மையத்தில், மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கான தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு, காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பிளாஸ்டிக் பை சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது. தற்போது இந்த தொழில்நுட்பத்தை பாரதியார் பல்கலை பெற்றுள்ளது.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
தவிடு சூடு செய்யப்பட்டு பல நிலைகளைக் கடந்த பின், மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்யப்படுகிறது. டி.ஆர்.டி.ஓ., மையத்திடம் இருந்து பெற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கோவை பாரதியார் பல்கலை வளாகத்திலேயே மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள சில நிறுவனங்கள், வியாபார ரீதியாக மட்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்வதாக தெரிவித்துள்ளது. ஆனால், இத்தொழில்நுட்பத்தை வேறு யாருக்கும் கொடுப்பதாக இல்லை. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
