கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட ஐகோர்ட் தடை
கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிட ஐகோர்ட் தடை
UPDATED : அக் 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வில் கலந்து கொள்ள 10 பேருக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்துள்ளது. ஆனால், தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணிவரன்முறை செய்வதற்கான சிறப்புத் தேர்வு அக்.12ம் தேதி நடக்கிறது.
வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரியிடம் இருந்து ‘ஹால் டிக்கெட்’ பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது; எங்களுக்கு வழங்கப்படவில்லை. தேர்வு வாரியத்தை அணுகியபோது, கம்ப்யூட்டர் கல்வியில் முதுநிலை பட்டயப் படிப்பு பெற்றதற்கான சான்றிதழை தாக்கல் செய்யாததால், அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து தேர்வு எழுதி, பெரியார் பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் பெற்றுள்ளோம்.
நாங்கள் ஒன்பது ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தால் பாதிக்கப்படுவோம். எனவே, 12ம் தேதி நடக்கும் சிறப்புத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுக்களை நீதிபதி கண்ணன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் செல்வராஜ் வாதாடினார். மனுதாரர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.
