புதிய பட்டதாரி ஆசிரியர் நியமனத்தால் எஸ்.எஸ்.ஏ., பயிற்றுனர்கள் பாதிப்பு
புதிய பட்டதாரி ஆசிரியர் நியமனத்தால் எஸ்.எஸ்.ஏ., பயிற்றுனர்கள் பாதிப்பு
UPDATED : அக் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சர்வ சிக்சா அபியான் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒன்றியத்துக்கு ஏழு ஆசிரியர்கள் வீதம் வட்டார வளமைய பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர்.
இத்திட்டத்தில், தலா 10 முதல் 14 பேர் வரை, ஒவ்வொரு ஒன்றியத்திலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல், கற்றல் முறை குறித்து பயிற்சி அளிக்கின்றனர்.
கடந்த 2006-07ம் கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 500 பயிற்றுனர்கள் வீதம் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்றச் செல்கின்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் தவிர பிற பாடங்களை முதன்மையாகக் கொண்ட பட்டதாரிகள் பலர், பள்ளிகளுக்கு சென்று விட்டனர். ஆனால், மேற்கண்ட மூன்று பாடங்களை பயிற்றுவிப்பவர்கள் பயிற்றுனர்களாகவே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் புதிதாக, ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாட அடிப்படையில் பயிற்றுனர்களாக நீடிப்போர், பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதில் தாமதமும், பிரச்னையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆசிரிய பயிற்றுனர் ஒருவர் கூறுகையில், ‘வேலை வாய்ப்பகம் மூலம் புதிதாக பணிக்கு வருவோர், அனுபவம் இல்லாத போதும் தங்களுக்கு அருகாமையில் உள்ள பள்ளியின் காலியிட நிலவரத்தை பயன்படுத்திக் கொள்வர். காலியிடத்திற்கு ஏற்ப வட்டார வளமைய பயிற்றுனர்களுக்கு பள்ளிகளில் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்படும்’ என்றார்.
எனவே, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் முன், பயிற்றுனர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
