தேசிய கல்வி இயக்கத்தை மறுசீரமைக்கும் மனித வள அமைச்சகம்
தேசிய கல்வி இயக்கத்தை மறுசீரமைக்கும் மனித வள அமைச்சகம்
UPDATED : அக் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்தியாவில் முழுக் கல்வியறிவை அடைவதை லட்சியமாகக் கொண்டு செயல்படும் தேசிய கல்வி இயக்கத்தை (என்.எல்.எம்.) மறுசீரமைத்து புத்துயிர் ஊட்டும் முயற்சிகளில் இந்திய அரசின் மனித வள அமைச்சகம் இறங்கியுள்ளது.
கல்வியறிவு விகிதம் குறையாமல் இருக்கும் பொருட்டு இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இவ்வாறு மறுவடிவமைக்கப்பட்ட திட்டம் ‘லோக் தலீம்‘ என்ற பெயரில் அழைக்கப்படவுள்ளது.
இந்த பெயரை மகாத்மா காந்தியின் ‘நய் தலீம்‘ என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு சூட்டியுள்ளது. காந்திஜியின் கொள்கையான தரமான கல்வி மற்றும் சுய சார்புடைய அமைப்பு முறை என்னும் 2 அடிப்படை அம்சங்களைக் கொண்டிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
‘லோக் தலீம்‘ என்ற வார்த்தை இந்தியையும் உருதுமொழியையும் சார்ந்த வார்த்தைகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. லோக் என்பது மக்களையும் தலீம் என்பது கல்வியையும் குறிக்கிறது.
இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த அடிப்படை வடிவம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் நிதித் தேவைகள் குறித்த வரைவு ஏற்கனவே சுற்றில் விடப்பட்டுள்ளது.
ஆரம்பப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் கட்டிடங்களில் இதற்கான வகுப்புகள் நடத்தப்படும். இந்த வடிவத்தை செயல்படுத்தும் திட்ட மேலாளர்களுக்கு செயல்சுதந்திரம் அதிகம் தரப்படும்.
இந்த இயக்கத்தில் முதியோருக்கு 4 மாதங்கள், சுய உதவிக்குழுக்களுக்கும் பஞ்சாயத்துக்களுக்கும் 10 மாதங்கள் வரை ஒரு இடத்தில் தங்கி பயிலும் வாய்ப்புகள் தரப்பட முடிவு செய்யப் பட்டுள்ளது.
