பள்ளி விடுமுறை குறித்து கலெக்டரே முடிவு செய்ய பரிந்துரை!
பள்ளி விடுமுறை குறித்து கலெக்டரே முடிவு செய்ய பரிந்துரை!
UPDATED : அக் 22, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: கனமழை பெய்தாலோ, புயல் சீற்றங்கள் ஏற்பட்டாலோ அந்தந்த மாவட்ட அளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து கலெக்டர்களே முடிவெடுத்து அறிவிக்கக் கோரி, தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித் துறை பரிந்துரை செய்ய உள்ளது.
மழைக்காலம் துவங்கினால் பள்ளிகளுக்குச் செல்வதில் மாணவ, மாணவிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அதிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்தால் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர். காலையில் பலத்த மழை பெய்யும்போது, ‘விடுமுறையா? உண்டா?’ என மாற்றி மாற்றி போன் செய்து விசாரிக்க வேண்டியிருக்கிறது.
பரவலாக மாவட்டங்களில் உள்ள நிலைமை குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் வந்தால், அதற்கு தகுந்தபடி விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளின்போது, மழை பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக விடுமுறை அறிவிப்பு வந்துவிடுகிறது.
மேலும், மாவட்டங்களில் உள்ள பாதிப்பு நிலவரங்கள் நேரடியாக சென்னையில் உள்ள இயக்குனரகத்திற்கு சரிவர தெரியாத நிலை ஏற்படுவதால், விடுமுறை அறிவிப்பது குறித்து முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், மழை பாதிப்பு மிகுந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து உடனுக்குடன் முடிவு எடுத்து அறிவிப்பதற்கு வசதியாகவும் பள்ளிக் கல்வித்துறை புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, மழைக் காலங்களில் அந்தந்த மாவட்ட நிலவரங்களை கருத்தில்கொண்டு, மாவட்ட கலெக்டர்களே விடுமுறை அறிவிப்பு செய்ய தமிழக அரசிடம் கேட்டுக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நிலைமைக்கு தகுந்தாற்போல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கக் கூடிய அதிகாரம் கலெக்டர்களுக்கு ஏற்கனவே இருந்தாலும், பொதுவாக பள்ளிக் கல்வித்துறையை எதிர்பார்க்கக்கூடிய ஒரு நிலை இருப்பதைத் தவிர்ப்பதற்காக, இந்த பரிந்துரையை செய்ய துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் எனக் கூறப்படுகிறது.
இனி கனமழை பெய்தால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலவரம் குறித்து அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் விடுமுறை குறித்த அறிவிப்பை மாவட்ட கலெக்டர் வெளியிடுவார். இதனால் மாநில அளவில் விடுமுறை விடுவது தவிர்க்கப்படும். மழை பாதிக்காத மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் நடைபெறவும் இது வழிவகுக்கும்.
