மாணவர் விடுதிகளில் வசதி எப்படி?: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
மாணவர் விடுதிகளில் வசதி எப்படி?: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
UPDATED : அக் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லி: நாடு முழுவதும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான 1,130 தங்கும் விடுதிகளில், அடிப்படை வசதி கூட இல்லாதது குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 240 மாவட்டங்களில் உள்ள இந்த தங்கும் விடுதிகளில், வசதிகள் செய்யப்படாதது குறித்தும், வழங்கப்படும் உணவு கூட தரமற்று இருப்பது குறித்தும், பா.ஜ.,வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2006-07ம் ஆண்டு நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
ஏராளமான விடுதிகள் வனப்பகுதிகளில், மின் வசதியின்றி அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அங்குள்ள மாணவர்கள் மெழுகுதிரி விளக்கொளியில் படிப்பதாகவும், இதனால் இவர்கள் மற்ற மாணவர்களை விட கல்வித்தரத்தில் குறைந்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் கூட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், அப்டாப் அலாம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து விளக்கம் அளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
