UPDATED : நவ 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் உழவியல் துறை பி.எச்டி., மாணவர் சம்பத்குமாருக்கு, 2008-09ம் ஆண்டுக்கான இஸ்ரேல் அரசின் உதவித்தொகை கிடைத்துள்ளது.
பல்கலையின் பட்ட மேற்படிப்புக்கான ‘டீன்’ சந்திரபாபு கூறியதாவது:
மாணவர் சம்பத்குமார், தனது ஆராய்ச்சிப் பணிகளை இஸ்ரேலில் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை மேற்கொள்வார். கல்விக்கட்டணம், சுகாதார காப்பீடு, மாத உதவித்தொகை என 600 அமெரிக்க டாலர்களை உள்ளடக்கியவை, இஸ்ரேல் அரசு வழங்கும் உதவித்தொகை.
குறைந்த சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பத்தால் மக்காச்சோள பயிரில் ஏற்படும் வினையியல் மற்றும் மகசூல் மாற்றங்களை அறிவது பற்றி, இவர் ஆய்வு மேற்கொள்வார். இந்த பாசன முறையில் பயிரின் வளர்ச்சிப் பருவங்களில் குறைந்த அளவு நீர் தரப்பட்டு, அதிக மகசூல் பெறப்படுகிறது.
குறைந்த அளவு நீர் தரப்படும் மக்காச்சோளப் பயிரில் ஏற்படும் ஊட்டச்சத்துக்களின் உட்கிரகித்தல் தன்மை மற்றும் வினையியல் மாற்றங்களான, ‘புரோலின்’ உற்பத்தி, நீராவி போக்கின் அளவு, இலைத்துளை அமைப்பு பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மாணவர் சம்பத்குமார், இஸ்ரேல் நாட்டிலுள்ள ஹீப்ரூ பல்கலையில் 2009 பிப்ரவரி முதல் ஆய்வு மேற்கொள்கிறார். இவ்வாறு, ‘டீன்’ சந்திரபாபு தெரிவித்தார்.
