‘குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாத பெற்றோர், ஆசிரியர் கழகங்கள்’
‘குழந்தைகள் நலனில் அக்கறை இல்லாத பெற்றோர், ஆசிரியர் கழகங்கள்’
UPDATED : நவ 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “தமிழக பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், குழந்தைகள் நலனில் போதிய அளவிற்கு அக்கறை காட்டுவதில்லை,” என்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா கூறினார்.
கல்விக்கான உரிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து, தமிழக அளவில் இரண்டு நாள் கருத்தரங்கு சென்னையில் நடந்தது. இதில், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்கா உட்பட பலர் கலந்து கொண்டு, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி குறித்த கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிருபர்களிடம் சின்கா கூறியதாவது:
குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்கி, அவர்கள் அனைவருக்கும் முழுமையான கல்வி அளிக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கம். 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டில் ஒரு கோடி 30 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். 2004-05ல் இந்த எண்ணிக்கை 86 லட்சமாக குறைந்துள்ளது.
தமிழக பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், குழந்தைகள் நலனில் போதிய அளவிற்கு அக்கறை காட்டுவதில்லை என்று புகார் தெரிவித்தனர். இந்த கருத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில் சேர்ந்து படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் 81 லட்சம் குழந்தைகள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பில் ஏழரை லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆரம்பக் கல்வியில் சேரும் எல்லா குழந்தைகளும் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு வரை இடையில் நிற்காமல் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
