டி.வி.ஆர்., சிறப்பிதழ் போட்டி: அப்துல் காதர் கல்லூரிக்கு கோப்பை
டி.வி.ஆர்., சிறப்பிதழ் போட்டி: அப்துல் காதர் கல்லூரிக்கு கோப்பை
UPDATED : நவ 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) நூற்றாண்டு சிறப்பிதழ் வடிவமைப்பு போட்டியில் முதலிடம் பெற்ற, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
பத்திரிகை உலகில் பல புதுமைகளைப் புகுத்தியவர் டி.வி.ஆர். நாளிதழ் மூலம் தமிழ்ச் சமுதாய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர். அவர் நூற்றாண்டை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்காக, ‘சிறப்பிதழ் வடிவமைக்கும் போட்டி’ அறிவிக்கப்பட்டது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்லூரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. இவற்றில், கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல் பரிசையும், மதுரை பாத்திமா கல்லூரி ஆறுதல் பரிசையும் பெற்றன.
கீழக்கரையில் நடந்த நிகழ்ச்சியில், தினமலர் சார்பில் கல்லூரிக்கு ‘டி.வி.ஆர்., கோப்பை’ மற்றும் பரிசு ரூ.10,000 வழங்கப்பட்டது. முதல்வர் (பொறுப்பு) யூனூஸ் பேகம் கோப்பையை பெற்றுக் கொண்டார்.
இதழ் தயாரிப்பு ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற விரிவுரையாளர் இரா.பொற்சிலம்பு, பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவிகள் எம்.சத்தியபாமா, ஆர்.சங்கீதா, ஆர்.யமுனா தேவி, கே.விஜயலட்சுமி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்த் துறை தலைவர் நபீசாள் பீவி நன்றி கூறினார்.
