அண்ணா பல்கலையில், 70 ஆயிரம் இன்ஜினியர்களுக்கு பட்டம்
அண்ணா பல்கலையில், 70 ஆயிரம் இன்ஜினியர்களுக்கு பட்டம்
UPDATED : நவ 10, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் படித்த பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 70 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா டிசம்பர் 19ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்த 70 ஆயிரம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
பிஎச்.டி., எம்.எஸ்., பட்டம் பெற்றவர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்பில் முதல் ‘ரேங்க்’ பெற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும். பட்டமளிப்பு விழாவில் 500 பேர் நேரில் பட்டம் பெறுவர்.
பட்டமளிப்பு விழா நடந்த 15 நாட்களுக்குள் அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும் ‘கிராஜுவேஷன் டே’ விழாவில் இப்பட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக யு.ஜி.சி., தலைவர் தொரட்டை அழைக்க முயற்சித்து வருகிறோம்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நூற்றாண்டை முன்னிட்டு, 2009ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் துவக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா நடக்கவுள்ளது. இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள எட்டு துறைகள் சார்பாக, எட்டு பேருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
அதில், காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன் (சி.டி.எஸ்.,) நிறுவன துணைத்தலைவர் லட்சுமி நாராயணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.
அண்ணாதுரைக்கு டாக்டர் பட்டம்?
இந்தியா நிலவிற்கு அனுப்பும் முதலாவது ஆளில்லா செயற்கைக்கோளான, சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் கோவை ஜி.சி.டி., பொறியியல் கல்லூரியில் பி.இ., (இ.சி.இ.,), பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லூரியில் எம்.இ., (அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்) பட்டம் பெற்றிருக்கிறார்.
அண்ணாதுரை கடந்த ஆகஸ்டில் கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்விற்காக பதிவு செய்திருக்கிறார். கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி மேலாண்மை கல்வித்துறை இயக்குனர் நெடுஞ்செழியனை ஆராய்ச்சி ஆலோசகராக (கைடு) கொண்டு, ‘பிராஜக்ட் மேனேஜ்மென்ட்’டில் பிஎச்.டி., ஆய்வு மேற்கொள்ள பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், அண்ணாதுரைக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தெரிகிறது. 2009ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச்சில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள சிறப்பு பட்டமளிப்பு விழாவில், சந்திரயான்-1 திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி கிடைத்தால், சிறப்பு பட்டமளிப்பு விழாவில் அண்ணாதுரைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும்.
