UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கனடாவில் எகிறிவரும் கல்விக்கான பயிற்சிக் கட்டணங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் டொரான்டோ நகரில் போராட்டத்தில் குதித்தனர். இது தொடர்பான மனு ஒன்றை ஊர்வலத்தின் முடிவில் அவர்கள் அரசின் வசம் ஒப்படைத்தனர்.
இதேபோன்ற போராட்டங்கள் முக்கிய நகரங்களாகிய ஒட்டாவா, சட்பரி, தன்டர்பே, மிசிசவுகா, லண்டன், கல்ப், பீட்டர்பரோ, ஹாமில்டன், ஸ்கார்பரோ, கிங்ஸ்டன், அண்டாரியோ போன்ற இடங்களில் நடந்துள்ளது. இவை அனைத்திலும் பயிற்சிக்கட்டணம் குறைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக எழுந்தன.
கனடாவின் அன்டாரியோவில் தற்போதைய முதல்வர் பணி ஏற்றபின் கல்விக்கட்டணங்கள் கனடாவிலேயே இரண்டாவது அதிக இடத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன் இது நான்காவது இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கட்டண விகிதம் குறைப்பது தொடர்பான வாய்மொழி உறுதிகள் பலமுறை வழங்கப்பட்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கனடாவின் மாணவர் அமைப்பான பெடரேஷன் ஆப் ஸ்டூடண்ட்ஸ் இன் அண்டாரியோ” தெரிவிக்கிறது.
கடந்த 2006 முதலே இந்தக் கோரிக்கைகள் எழுந்தபோதும், தொடர்ந்து கனடாவில் கல்விக்கட்டணங்கள் கூடிக் கொண்டே வந்துள்ளன. இதனால், கோபமடைந்த மாணவர்கள் இப்போராட்டத்தில் இறங்கி உள்ளதுடன், 60 ஆயிரம் பேர் கையெழுத் திட்ட மனுவையும் அவர்கள் அரசிடம் தந்துள்ளனர்.
ஒருபுறம் நிதிச்சிக்கல், பணவீக்கம் போன்றவற்றுடன் போராடும் மாணவர்கள் படிப்புகளை ரூ.13.50 லட்சம் கடனுடன் முடிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. 5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாணவர் அமைப்பு தனது போராட்டங்களை இன்னமும் பலப்படுத்த போவதாகக்கூறி வருகிறது.
