தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிலவில் துருவப் பகுதியை ‘சந்திராயன்-2’ ஆராயும்: அண்ணாதுரை

நிலவில் துருவப் பகுதியை ‘சந்திராயன்-2’ ஆராயும்: அண்ணாதுரை

நிலவில் துருவப் பகுதியை ‘சந்திராயன்-2’ ஆராயும்: அண்ணாதுரை


UPDATED : நவ 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கிணத்துக்கடவு:
கோவை மாவட்டம், கிணத்துக்கடவை அடுத்துள்ள கோதவாடியைச் சேர்ந்தவர், ‘சந்திரயான்’ திட்ட இயக்குனர் இஸ்ரோ விஞ்ஞானி அண்ணாதுரை. அங்கு அவருக்குப் பாராட்டு விழா நடந்தது.
முன்னதாக, விஞ்ஞானி அண்ணாதுரை, தான் படித்த கோதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின், வகுப்பறைக்குச் சென்றார். ‘எனக்கு ‘அ’ ‘ஆ’ சொல்லிக் கொடுத்த எனது அருமை ஆரம்பக் கல்வி நிலையத்துக்கு எனது மரியாதைக்குரிய வாழ்த்துக்கள்’ என, பள்ளி பார்வையாளர்கள் புத்தகத்தில் எழுதி கையொப்பம் செய்தார்.
தொடர்ந்து பள்ளிக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கி, அவர் பேசியதாவது:
எனது வாழ்நாளில் முதல் 10 ஆண்டுகள் இந்த கோதவாடி மண்ணில் வாழ்ந்திருக்கிறேன். இந்த ஊர் மண்ணுக்கு நன்றி. ‘சந்திரயான்’ என்பது இந்த நாட்டின் செல்லக்குழந்தை, ஒரு குழந்தையை எவ்வாறு வளர்போமோ, அதேபோல நான்கரை ஆண்டுகள் அணு அணுவாக வளர்த்த ‘சந்திரயான்’ விண்கலம் அக்., 22ம் தேதியன்று நிலவுக்குச் செலுத்தப்பட்டது.
நாம் கோவிலுக்குப் போகிறோம்; வழிபடுகிறோம்; கோபுரத்தையும் மூர்த்திகளையும், கலசத்தையும் வணங்குறோம். அதைத் தாங்கி நிற்கும் அடிக்கல் கண்ணுக்குத் தெரிவதில்லை. அந்த அடிக்கல் இருப்பதால் தான் கோவில் இருக்கிறது. அதேபோல் தான், எனது வாழ்க்கைக்கு அடிக்கல் என்று சொன்னால், கோதவாடி பள்ளி தான் என்று சொல்வேன்.
இங்கே சில குழந்தைகள் உங்களுக்கு எழுச்சி எப்படி வந்தது என்று கேட்டனர். அப்துல் கலாம் பற்றிய செய்தித் தாள்களை எனது தாய் எனக்கு அனுப்பி வைப்பார்; அந்த செய்திகள் எனக்கு உத்வேகம் தந்தது.
நாசா விஞ்ஞானிகள் ஒரு விண்கலத்தை உருவாக்க ஏழு ஆண்டுகள் வரை உழைக்கின்றனர். ஆனால், நான்கரை ஆண்டுகளில் ‘சந்திரயான்’ விண்கலத்தை உருவாக்கி நிலவுக்கு அனுப்பியுள்ளோம். இந்த உத்வேகத்தை அளித்தவர்கள் எனது தாய், தந்தையர் தான்.
ஒவ்வொரு இளைஞனும் இந்தியாவை விட்டு வெளிநாடு செல்ல வேண்டியதில்லை. இந்தியாவிலேயே சாதிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்குத் தேவை உத்வேகம். ஒவ்வொரு இளைஞனும் சாதிக்க வேண்டும். ‘ஒவ்வொரு இந்தியனுக்கும் சாதிக்க வேண்டும்’ என்ற உத்வேகம் இருக்க வேண்டும். நம் நாட்டிற்கு வெளிநாட்டவர் படிக்கவும், வேலை செய்யவும் வரவேண்டும் என்பதே எனது லட்சியம்.
‘சந்திரயான்-2’  2011-12ம் ஆண்டில் நிலவுக்கு அனுப்பட உள்ளது. தற்போதைய விண்கலம் கனிம வளப்பகுதியில் இறங்கியுள்ளது. நிலவில் துருவப் பகுதிகள் இன்னும் ஆராயப்படவில்லை. இப்பகுதியில் சூரிய ஒளி இல்லை. இதனால், துருவப் பகுதிகளுக்குச் செல்லும் வழியில் உள்ள சூரிய ஒளியைப் பயன்படுத்தி, அப்பகுதியில் நிலை நிறுத்தி தண்ணீர் மற்றும் கனிம வளங்கள் பற்றியும் ஆராயப்படும். இதை, ‘சந்திரயான்-2’ விண்கலம் சரியான முறையில் செய்து முடிக்கும். இவ்வாறு விஞ்ஞானி அண்ணாதுரை பேசினார்.
தான் வாழ்ந்த வீட்டுக்குச் சென்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், “10 ஆண்டுகள் இங்கு வசித்தேன், அப்போது இந்த வீதியில் தார்ரோடு இல்லை. இவ்வீதி வழியாக எனது நண்பர்களுடன் சென்று விளையாடி விட்டு வரும்போது, உடம்பு முழுவதும் தூசி படர்ந்து இருக்கும். அன்று இருந்த அதே உற்சாகத்துடன் தான் இப்போதும் இருந்து வருகிறேன்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us