தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 படிப்பு அடித்தளம் போன்றது: துணைவேந்தர் மன்னர் ஜவஹர்

பிளஸ் 2 படிப்பு அடித்தளம் போன்றது: துணைவேந்தர் மன்னர் ஜவஹர்

பிளஸ் 2 படிப்பு அடித்தளம் போன்றது: துணைவேந்தர் மன்னர் ஜவஹர்


UPDATED : நவ 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
“அடித்தளம் வலுவாக இருந்தால் அதற்கு மேல் நிறைய தளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பிளஸ் 2 படிப்பு அடித்தளம் போன்றது,” என, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசினார்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த ‘தினமலர்’ ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தினமலர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஆர்வத்துடன் இங்கு வந்துள்ள உங்களுக்கு எனது பாராட்டுக்கள். பொதுவாக படிப்பு என்பது மூன்று காலகட்டமாக பிரிக்கப்படும். 10ம் வகுப்பு வரையில் ஒரு காலகட்டம். பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பது இரண்டாம் காலகட்டம். பிளஸ் 2விற்கு பின் மூன்றாம் காலகட்டம். நீங்கள் தற்போது இரண்டாம் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். 10ம் வகுப்பு வரை மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருப்பர்.
ஆனால், இந்த இரண்டாம் காலகட்டத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியுமே என்ற எண்ணத்துடன் இருப்பர். பெற்றோர் சொல்வது பிடிக்காது. நமக்கு நிறைய அறிவுள்ளது என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால், அனுபவப்பூர்வமாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், பிளஸ் 2 படிக்கும் காலகட்டம் மிகவும் முக்கியம்.
பிளஸ் 2 படித்த பின் பி.இ., பி.டெக்., படிப்பு நான்காண்டுகள் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றால், 60 வயது வரை 40 ஆண்டுகள் வேலை பார்க்கலாம். 40 ஆண்டுகள் வேலை பார்ப்பதற்கு நான்காண்டுகள் படிப்பு மிகவும் முக்கியம். இது படிக்க பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். நான்கு மாதத்தில் வரும் பொதுத் தேர்வுக்கு நல்லமுறையில் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம்.
நன்றாகப் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்தால், ஒற்றைச் சாளர முறையில் சிறந்த கல்லூரியில், நல்ல பாடத்தை எடுத்துப் படிக்கலாம். சிறந்த கல்லூரி என்பது லேப், கம்ப்யூட்டர், வகுப்பறை, மைதானம், விடுதி உ<ள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை நிறைவாக கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் தகுதியும், அனுபவமும் நிறைந்த ஆசிரியர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் அங்கு தரமான கல்வி கிடைக்கும்.
இந்த கல்லூரிகளில் சேர நல்ல மதிப்பெண் இருக்க வேண்டும். நான்கு மாதங்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும். ஆழ்ந்து கவனத்துடன் படிப்பது என்பது மிகவும் முக்கியம். அதிக நேரம் படிக்க வேண்டாம்; இரண்டு மணி நேரம் ஆழ்ந்த கவனத்துடன் படித்தால் போதுமானது. பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை அண்ணா பல்கலையில் 36 வகை பிரிவுகள் இருந்தாலும், 85 சதவீதத்திற்கும் மேல் மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
எந்த பிரிவில் படித்தாலும், மென்பொருள் துறையில் பணிக்கு எடுத்துக் கொள்கின்றனர். எந்த துறை விருப்பம் என்பதை நீங்கள் தேர்வு செய்துகொள்ள வேண்டும். இந்தாண்டில் இ.சி.இ.,யில் அதிகமானவர்கள் சேர்ந்துள்ளனர். நீங்கள் எந்த துறையில் சேர்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; அதில் எப்படி படிக்க வேண்டும் என்பதே முக்கியம்.
அதற்கு அடித்தளமான பிளஸ் 2 விலிருந்தே நீங்கள் சிறப்பாகப் படிக்க வேண்டும். முக்கியத்துவம் தர வேண்டும். அடித்தளம் வலுவாக இருந்தால் அதற்குமேல் நிறைய தளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். முழுமையாக கவனத்தை சிதற விடாமல் படிக்க வேண்டும். மேலும், வாய்ப்புகளை நீங்கள் எப்போதும் நழுவ விடக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.
நமக்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பை நாம் எப்படியாவது தக்க வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக நமது பங்கேற்பு என்பது மிகவும் முக்கியம். நான் கிராமத்தில் பிறந்து, தமிழ்ப் பள்ளியில் படித்து இங்கு துணைவேந்தராக வந்துள்ளேன். நீங்கள் இங்கு படிப்பதால் உங்களுக்கு  வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. உங்கள் திறமை, ஆர்வத்தை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொண்டு உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
நினைத்தது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு கடின உழைப்பு, நேர்மை, அமைதி, ஈடுபாடு போன்றவை மிகவும் முக்கியம். இவ்வாறு மன்னர் ஜவஹர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us