‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி: மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வம்
‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி: மாணவ, மாணவியர் மிகுந்த ஆர்வம்
UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘தினமலர்’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தாங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளை ஆர்வத்துடன் பெற்றுச் சென்றனர்.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நவ. 16ம் தேதி காலை பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்காகவும், பிற்பகல் கலைப்பிரிவு மாணவர்களுக்காகவும் நடத்தப்பட்டதில், பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கடந்தாண்டு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்ற காட்சிகள் திரையிடப்பட்டன.
தேர்வில் நேர மேலாண்மை பற்றியும், எந்த பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும் என்பது பற்றியும், அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்தும் ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினர்.
பாடங்கள் தொடர்பான விளக்கங்கள், வினாக்கள் கேட்கப்படுவது எப்படி, எப்படி மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன, விடையளிப்பது எப்படி என்பது குறித்த ஆசிரியர்களின் விளக்கம் மேடையின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாணவர்களுக்காக தனித்தனியாக திரைகள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் இருந்து தேவையான குறிப்புகளை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.
காலையில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையிலேயே, அதிகப்படியான மாணவர்கள் பிற்பகல் கலைப்பிரிவு நிகழ்ச்சிக்கு அரங்கத்திற்கு வெளியில் காத்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்த அறிவியல் மற்றும் கலைப்பிரிவு மாணவர்கள் என அனைவருக்கும், தேர்விற்கான முக்கிய கேள்விகள் மற்றும்‘ புளூ பிரின்ட்’ அடங்கிய புத்தகம், இறையன்பு ஐ.ஏ.எஸ்., எழுதிய ‘ ஜெயித்துக் காட்டுவோம்’ வழிகாட்டுதல் புத்தகம், தேர்வு எழுதும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய ‘ உடம்பும் மனசும் நல்லா இருக்கணும்’ என்ற புத்தகம், குறிப்பெடுப்பதற்கான ஏடு மற்றும் பேனா ஆகியவை அடங்கிய பை இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் மற்றும் ரமேஷ்பிரபா ஆகியோர் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழுடன் இணைந்து எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி, சாம்ஸ் இன்ஜினியரிங் கல்லூரி, ஸ்ரீ சாஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், ஜே.என்.என்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகிய நிறுவனங்கள் நடத்துகின்றன.
திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சோமசுந்தரம் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் மற்றும் கருணாகரன் உட்பட நுõற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாணவர்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
