தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எங்கே செல்கிறது மாநகராட்சிகளின் ஆரம்ப கல்வி நிதி?

எங்கே செல்கிறது மாநகராட்சிகளின் ஆரம்ப கல்வி நிதி?

எங்கே செல்கிறது மாநகராட்சிகளின் ஆரம்ப கல்வி நிதி?


UPDATED : நவ 17, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
சென்னை நீங்கலாக மற்ற மாநகராட்சிகளில் ஆரம்பக் கல்வி நிதி சரியாக பயன்படுத்தப்படவில்லை என்று இந்திய தணிக்கை துறைத் தலைவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சொத்து வரி மதிப்பில் 5 சதவீதத்திற்கு மிகாமல் கல்வி வரியை விதிக்கும் மாநகராட்சிகள், அவ்வாறு வசூலிக்கப்பட்ட வரியை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆரம்பக் கல்வி நிதியில் வரவு வைக்கின்றன. பள்ளிகளின் மூலதனச் செலவுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு ஆரம்பக் கல்வி நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிதி, ஒரு தனி வங்கிக் கணக்கில் பராமரிக்கப்பட்டு ஓராண்டு கடந்த பின் கையிருப்பு, அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். சென்னை நீங்கலாக மற்ற ஐந்து மாநகராட்சிகளில் ஆரம்பக் கல்வி நிதி மற்றும் பள்ளிகள் பராமரிக்கப்பட்டது மீது தணிக்கை துறைத் தலைவர் நடத்திய செயலாக்கத் தணிக்கையில், ஆரம்பக் கல்வி நிதி பயன்பாட்டில் பல்வேறு முறைகேடுகள், உள்கட்டமைப்பு மற்றும் வசதி இல்லாததையும் வெளிக் கொணர்ந்துள்ளது.
இதில், ஆரம்பக் கல்வி நிதியில் இருந்து 2002-07ம் ஆண்டுகளில் மாநகராட்சிகளால் செய்யப்பட்ட செலவினம் திருத்திய மதிப்பீடுகளின் பார்வையில், 18 சதவீதம் முதல் 97 சதவீதம் வரையில் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறைபாட்டுக்கு இம்மாநகராட்சிகள் கூறிய காரணங்கள், நிதி நிலை நம்புவதற்குரிய முறையில் தயாரிக்கப்படாததை உணர்த்துவதாக தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
கல்வி வசூல் நிலுவை:
ஆண்டாண்டுகளாக வரி வசூலிப்பதில் ஏற்பட்ட குறைபாடு 2006-07ம் ஆண்டு முடிவில் 66 முதல் 82 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வகையில் கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் வசூலிக்கப்படாமல் உள்ள கல்வி வரி 22.64 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. வசூலிக்கப்படாததற்கான காரணங்கள் எதையும் மதுரை, சேலம், நெல்லை மாநகராட்சிகள் அளிக்கவில்லை.
நிதியை பயன்படுத்துவதில் குறைபாடு:
கல்வி வரியில் குறைந்தபட்சம் 25 சதவீதமாவது பள்ளிக் கட்டடங்களை பராமரிப்பதற்கு செலவிடப்பட வேண்டும். பள்ளிகள் மேம்பாட்டிற்கு செலவழிக்கப்பட வேண்டிய குறைந்தபட்சத் தொகை பள்ளி ஒன்றுக்கு 1998-99ம் ஆண்டு 10 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கேற்ப 2002-07ம் ஆண்டில் பள்ளி ஒன்றிற்கு செலவிடப்பட வேண்டிய குறைந்தபட்சத் தொகை 18 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய்.
கடந்தாண்டு மார்ச் மாதம் முடிய ஐந்து மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த 20 பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 299 பள்ளிகள் இருந்தன. இதில், 108ல் மூன்றாண்டுகளாக எந்தப் பணியும் செய்யப்படவில்லை. மேலும், பிற திட்ட நிதிகளில் இருந்து செய்த பணிகள் குறித்த ஆய்விலும், இந்த 108 பள்ளிகளில் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வகையில், பள்ளிகளின் பராமரிப்பிற்கு ஆரம்பக் கல்வி நிதியைப் பயன்படுத்துவதில் இருந்த குறைபாடு 66 முதல் 89 சதவீதம் வரையில் இருந்ததாக தணிக்கை துறைத் தலைவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் 2004-05 மற்றும் 2005-06ம் ஆண்டுகளில் மதுரை, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகள் மாதிரி பள்ளிகள் கட்டுதல், வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட 17 மூலதனப் பணிகள் 2.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப் படாமல் உள்ளது.
பணிகளை மேற்கொள்ளாமல் விட்டதற்கு கூறப்பட்ட காரணங்கள் சரியானவை அல்ல. ஆரம்பக் கல்வி நிதியில் இருந்து பள்ளிக் கட்டடங்கள் தொடர்பான பணிகளை மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தகுதியில்லாத பணிகளுக்கும் ஆரம்பக் கல்வி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் கோவை, சேலம், திருச்சி ஆகிய மூன்று மாநகராட்சிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றுக்காக 1.33 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை, கோவை, சேலம் மற்றும் திருச்சி மாநகராட்சிகள் ஆரம்பக் கல்வி நிதியிலிருந்து 9.68 கோடி ரூபாயை பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர்.
மாநகராட்சிகளுக்குச் சொந்தமான 258 பள்ளிகளில் போதிய அளவிற்கு சிறுநீர் கழிப்பிடங்கள், கழிப்பறைகள் போதுமான எண்ணிக்கையில் அமைக்கப்படவில்லை. மேலும், இந்த ஐந்து மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான விளையாட்டு மைதானம், நுõலக கட்டடம், போதிய குடிநீர் வழங்கல், தீயணைப்பு கருவிகள் மற்றும் வகுப்பறைகள் போதுமான அளவிற்கு இல்லை.
சொந்தமாக அல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் பள்ளிகளிலும் இது போன்ற வசதிகள் இல்லை. இவ்வாறு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், 2002-03ம் ஆண்டை ஒப்பிடும் போது 2006-07ல் ஆரம்பக் கல்வியில் 31 சதவீதமும், உயர்கல்வியில் 22 சதவீதமும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருந்தது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us