ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் நெகிழ வைத்த இளைஞர்
ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில் நெகிழ வைத்த இளைஞர்
UPDATED : நவ 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் வழங்கப்படும் முக்கிய புத்தகங்கள், பாடக் குறிப்புகளை, தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, உடல் ஊனமுற்ற இளைஞர், சென்னை வந்து அவற்றைப் பெற்றுச் சென்றார்.
‘பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும்போது ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், பாடக் குறிப்புகளின் பயனை நான் நன்றாக அறிவேன்’ என அந்த இளைஞர் குறிப்பிட்டார்.
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் வழங்கப்படும் முக்கிய புத்தகங்கள் மற்றும் பாடக் குறிப்புகளைப் பெற்று, மாணவர்கள் புயலாக அரங்கத்திற்குள் நுழைந்தபோது, ஊனமுற்றோர் சைக்ளில் தட்டுத் தடுமாறி ஓர் இளைஞர், மெதுவாக அரங்கத்தின் வாசலுக்கு வந்தார்.
விசாரித்தபோது, பெயர் மணிகண்டன்(22) என்பதும், திருத்தணியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இரண்டு கால்களும் முற்றிலும் செயலிழந்த நிலையில் இருந்தார்.
‘ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது அஞ்சல் வழியாக பி.எஸ்சி., படித்து வருகிறேன். என்னிடம் டியூஷன் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே என்பதற்காக, நிகழ்ச்சியில் வழங்கப்படும் பாடக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களைப் பெறுவதற்காக வந்தேன்’ என்றார். அவரிடம் பாடக் குறிப்புகள் அடங்கிய பையைக் கொடுத்ததும் முகத்தில் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது.
மணிகண்டன் மேலும் கூறியதாவது:
கடந்த 2000ம் ஆண்டு 10ம் வகுப்பு முடித்தேன். அப்போது திருவள்ளூரில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அங்கு கொடுக்கப்பட்ட ‘டிப்ஸ்’களும், பாடக் குறிப்புகளும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2 படிக்கும்போது, வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடந்த ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.
இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவன் என்பதால், இதன் அருமை, பெருமைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது என்னிடம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் டியூஷன் படிக்கின்றனர். அந்த மாணவர்களுக்கு இந்த பாடக் குறிப்புகள் கிடைத்தால், அவர்களும் அதிக மதிப்பெண் பெறுவர். அதைப் பெறுவதற்காகத் தான் வந்தேன். இவ்வாறு மணிகண்டன் கூறினார்.
‘டியூஷன்’ என்ற பெயரில் அப்பாவி மாணவர்களிடம் பணத்தைக் கொள்ளையடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களுக்கு மத்தியில், தன்னிடம் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் பாடக் குறிப்புகளைப் பெற மணிகண்டன் வந்தது, பார்வையாளர்களை மனம் நெகிழச் செய்தது.
