UPDATED : நவ 20, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, தினமலர் நடத்தும் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னையில் மூன்றாவது நாளாக நவ. 19ம் தேதியும் நடந்தது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நடப்பு ஆண்டுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னையில் கடந்த 15ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்களும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் முழுவதும் நிரம்பி, வெளியிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நிகழ்ச்சியை பார்வையிட்டு குறிப்புகளை எடுத்து பயனடைந்தனர்.
மூன்றாவது நாளாக, சென்னை மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கென்று பிரத்யேகமாக நேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்காக தனியாக நிகழ்ச்சி நடத்தப்படும். அதேபோல் நேற்று இரண்டு சுற்றாக நடந்த நிகழ்ச்சியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
காலை 8.40 மணிக்கு முதல் சுற்று துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள், நிகழ்ச்சியின்போது கவுரவிக்கப்பட்டனர்.
முதல் இடத்தைப் பெற்ற சுகன்யா, ஸ்வர்ணலதா, ஏஞ்சல், இரண்டாம் இடத்தைப் பிடித்த ரேணுகாதேவி, திவ்யா, மஞ்சு, மூன்றாம் இடத்தை பிடித்த நாராயணவடிவு ஆகிய மாணவிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தினமலர்’ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நினைவுப் பரிசு மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகம் ஆகியவற்றை வழங்கினர்.
பகல் 12.30 மணிக்கு இரண்டாவது சுற்று துவங்கியது. இதிலும் 5,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் குவிந்ததால் அரங்கம் நிரம்பி வழிந்தது. சென்னை திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் குழுவினர், மாநகராட்சி பள்ளி ஆசிரியர் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினர்.
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பழனிச்சாமி, மாநகராட்சி கல்வி அதிகாரி மோகன்குமார் மற்றும் உதவிக் கல்வி அலுவலர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இன்று, மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடக்கிறது.
