ஆங்கில அறிவு அவசியம்: தினமலர் ஆசிரியர் வலியுறுத்தல்
ஆங்கில அறிவு அவசியம்: தினமலர் ஆசிரியர் வலியுறுத்தல்
UPDATED : நவ 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “வெளிநாடுகளுக்கு சென்று படிக்க மாணவர்கள் ஆங்கிலம் பேசும், சரியாக உச்சரிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
‘தினமலர்’ சார்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்காக நவ. 20ம் தேதி நடத்தப்பட்ட ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
எனது வாழ்க்கையில் பல சோதனைகளையும், சாதனைகளையும் சந்தித்துள்ளேன். சோதனைகளுக்கு மத்தியில் தான் சாதனைகள் செய்துள்ளேன். தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி. எனவே, யாரும் தோல்வியைக் கண்டு கவலைப்படக் கூடாது.
வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி படிப்பதற்கு ஆங்கில அறிவு மிகவும் முக்கியம். ஆங்கிலத்தைச் சரியான உச்சரிப்புடன் பேசுவதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆங்கில உச்சரிப்பு சரியாக வர பி.பி.சி., சி.என்.என்., மற்றும் டிராவல் செய்தி சேனல்களை தொடர்ந்து பாருங்கள். அவற்றில் ஆங்கில உச்சரிப்பு சிறப்பாக உள்ளது.
ஆங்கில உச்சரிப்பை வளர்த்துக் கொள்ளும் போது, வெளிநாடுகளுக்குச் சென்றால் திகைப்பு ஏற்படாது. ஆங்கிலத்தில் தெரியாத வார்த்தைகளுக்கு பொருள் தேட, ‘டிக்ஷனரி’ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கல்வித் துறை அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில மாநகராட்சிப் பள்ளிகளில், அமைச்சரிடம் சிபாரிசு பெற்றால் தான் இடம் கிடைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதாகக் கூறினர். மாநகராட்சிப் பள்ளியின் தரத்தை இந்தளவிற்கு உயர்த்திய ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
பிளஸ் 2 கல்வி, மாணவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். அதிக மதிப்பெண்கள் பெற்றால் உயர்கல்விக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். கடந்தாண்டு மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்காக இதே அரங்கில் நடத்தப்பட்ட ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். அந்தளவிற்கு பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு இங்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ஆசிரியர்கள் தரும் குறிப்புகளை எடுத்து, வீட்டில் சென்று அவற்றை திருப்பிப் பார்த்து, தேர்வுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். மாணவர்கள் திரளாக வந்த போது, கூட்டத்தைப் பார்த்து எனக்கு அச்சம் ஏற்பட்டது. அச்சத்தைப் போக்கி, மாணவர்களை சரியாக உள்ளே அமரச் செய்து பாதுகாப்பளித்த போலீசாருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு ஆசிரியர் பேசினார்.
நிகழ்ச்சியில், சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் சோமசுந்தரத்திற்கு, ‘தினமலர்’ ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்து கவுரவித்தார்.
உதவி கமிஷனர் சோமசுந்தரம் பேசுகையில், “நான் படித்த 1960ம் ஆண்டில், எனது வாழ்க்கைக்கு வழிகாட்ட எந்த பத்திரிகையும், அமைப்பும் இல்லை. இன்று உங்களுக்கு தினமலர் நாளிதழ் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள். இதை நடத்துவதன் மூலம் வாழ்த்துக்களும், புண்ணியமும் தினமலர் நிறுவனம், நிறுவனத்தாரின் குடும்பத்திற்கு பன்மடங்கு வந்து சேரும்,” என்றார்.
