கண்களுக்கும் செவிக்கும் விருந்தான ‘ராவணா’ நாடகம்: மாணவர்கள் அசத்தல்
கண்களுக்கும் செவிக்கும் விருந்தான ‘ராவணா’ நாடகம்: மாணவர்கள் அசத்தல்
UPDATED : நவ 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம மாணவர்களின் ‘செட்டிநாடு பிளேயர்ஸ்’ நான்காண்டுகளாக காப்பிய நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. ‘கர்ணா, வாலிவதம், பீஷ்மா’ போன்ற நாடகங்களை அரங்கேற்றிவிட்டு, இந்தாண்டு நான்காவதாக ‘இலங்கேஸ்வர-ராவணா’ ஆங்கில நாடகத்தை அரங்கேற்றியது.
சினிமா கலை இயக்குனர் தோட்டா தரணி, நாடகத்திற்கான அரங்கை வடிவமைத்திருந்தது கூடுதல் பலம். ‘மோலிரியன் டான், ஜுவான், காமஸின் கலிகுலா’ போன்ற படைப்புகளைத் தந்த இயக்குனர் ஜெயக்குமார் இந்த நாடகத்தை இயக்கியுள்ளார். நாடகத்தின் விறுவிறுப்பு, இவரது இயக்கத்தில் தெரிந்தது.
ராவணாவாக-சியாம், ராமனாக- உஜ்வால், லட்சுமணனாக -ஆசிப், சீதாவாக-மேகா உட்பட 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் எந்தக் குறையுமின்றி நடித்தனர். கும்பகர்ணனை போருக்கு அனுப்புவதில் துவங்கி, ராவணன் வீழ்வது வரையிலான கதையை முத்துசாமி குமாரவேல், தீபிகா உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருந்தனர். மேடையில் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
‘அதர்மம் ஒருநாள் தர்மத்திற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்’ எனும் கருத்தை கையில் எடுத்து களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நாடகம் தொடர்ந்து நவ. 22 மற்றும் 23ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு நடக்கிறது. நாடகத்திற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் மீனா ராணி முத்தையா, பள்ளி முதல்வர் அமுதலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் குழு செய்திருந்தது.
