UPDATED : நவ 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: ‘தினமலர்’ நாளிதழ், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்திய ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, கோவை பீளமேடு சி.ஐ.டி., கல்லூரி கலையரங்கில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகளை கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்.
தமிழ் ஆசிரியர் பிரேமா: தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற கூடுதல் சிரத்தை எடுக்க வேண்டும். முதல்தாளில், 20 வரி வினா விடைக்கு முன்னுரை, பொருளுரை, உள்தலைப்பு, முடிவுரை எழுத வேண்டும். செய்யுள் வரியை குறிப்பிடுவது அவசியம். உறுப்பிலக்கணம் பகுதியில் இருந்து இரு கேள்விகள் வரக்கூடும்.
பொருத்துக பகுதியில் நூல் பெயர், ஆசிரியர் பெயர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதற்கு சரியான விடையை எழுதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.
இரண்டாம் தாளில் பெருவினாவுக்கு சரியாக பதிலளித்தால் 24 மதிப்பெண் கிடைக்கும். நாடகம் எழுதும்போது குறிப்புச்சட்டகம், முன்னுரை, பொருளுரை, முன்கதைச் சுருக்கம், இடம், காலம், காட்சிகள், முடிவுரை எழுத வேண்டும். கதைமாந்தர் திறனாய்வு பகுதியில் தலைப்பு, கருப்பொருள், முடிவுரை எழுதுவது அவசியம்.
ஆங்கில ஆசிரியை கமலா: பிளஸ் 2 வில் ஆங்கில பாடம், சில மாணவர்களுக்கு அலர்ஜியாக இருக்கும். இதை கவனமாக படித்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். முதல்தாளில் பிரிவு ‘அ’ பகுதியில் 30 மதிப்பெண்ணிற்கும், பிரிவு ‘ஆ’ பகுதியில் இலக்கணத்தில் இருந்து 20 மதிப்பெண்ணிற்கும் கேள்விகள் கேட்கப்படும். ‘இ’, ‘ஈ’ பிரிவில் தலா 15 மதிப்பெண், ‘உ’ பிரிவில் 20 மதிப்பெண்ணிற்கும் கேள்விகள் கேட்கப்படும்.
அ பகுதிக்கு 30 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். ஆ பகுதிக்கு 30 நிமிடம், இ பகுதிக்கு 20 நிமிடம், ஈ பகுதிக்கு 30 நிமிடம், உ பகுதிக்கு 40 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். ஈ பிரிவில் இருந்து ஒரு கட்டுரை கேட்கப்படும். இது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதல்தாளில் மொத்தம் 69 கேள்விகள் (சாய்ஸ் உட்பட) கேட்கப்படும். இரண்டாம் தாளில் ஆ பிரிவில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரிந்து வைத்திருப்பது நல்லது. ஊ பிரிவில் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும். சரியாக எழுதினால் 10 மதிப்பெண் வழங்கப்படும்.
கணித ஆசிரியர் சில்வர்ஸ்டர் சந்துரு: கணிதம் மிகவும் எளிமையான பாடம். புத்தகத்திலுள்ள கணக்குகளை செய்து பார்த்தாலே, நல்ல மதிப்பெண் பெற முடியும். கணிதத்தின் அ பிரிவில் 40 ஒரு மதிப்பெண் கேள்வி கேட்கப்படும். இவை பாடத்தின் எந்த பகுதியில் இருந்தும் கேட்கப்படலாம்.
ஆ பிரிவில் 60 மதிப்பெண், இ பிரிவில் 100 மதிப்பெண் பெறுவதற்கான கேள்விகள் கேட்கப்படும். இவை இரண்டில் அதிக கவனம் செலுத்தினால், மதிப்பெண்களை அள்ள முடியும். பாடத்திலுள்ள கணக்குகளை அடிக்கடி செய்து பார்க்கும் போதுதான், நினைவில் எப்போதும் நிற்கும்.
இயற்பியல் ஆசிரியை சுதா: பகுதி ஒன்றில் 30 ஒரு மதிப்பெண் கேள்வி கேட்கப்படும். பகுதி 2ல் 20 கேள்வி கொடுக்கப்படும்; 15 கேள்விளுக்கு பதிலளித்தால் போதும். சரியாக பதிலளிக்கும் போது 45 மதிப்பெண் பெற முடியும். பகுதி 3ல் 12 கேள்வி கொடுக்கப்பட்டு, ஏழு கேள்விக்கு பதிலளிக்கும்படி கூறப்பட்டு இருக்கும்.
இயற்பியலைப் பொறுத்தவரை இரண்டு மற்றும் ஏழாவது பாடங்களில் இருந்து 10 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. குறிப்பாக 1,4,5,6,8வது பாடங்களை படித்துக் கொள்வது நல்லது. பார்முலாக்களை எழுதவில்லையெனில் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.
வேதியியல் ஆசிரியை ரம்யா: பகுதி ஒன்றில் 30 ஒரு மதிப்பெண் வினா கேட்கப்படும். பகுதி இரண்டில் 31 முதல் 51 வரையும், பகுதி 3ல் 52 முதல் 63 வரையும் கேள்வி இடம் பெற்றிருக்கும். பொதுவாக அங்கக வேதியியல், அனங்கக வேதியியல் இருந்து அதிக கேள்வி கேட்க வாய்ப்புள்ளது.
பகுதி 2ல், 21 கேள்வி கொடுக்கப்பட்டு இருக்கும். 15 கேள்விளுக்கு பதில் அளித்தால் போதும். அங்கக, அனங்கக வேதியியல் பகுதியில் இருந்து 14 கேள்விகள் வரக்கூடும். 5,6,14,17,21 ஆகிய பாடங்களில் இருந்து மூன்று மதிப்பெண் கேள்வி அதிகளவில் கேட்க வாய்ப்பில்லை.
பொதுத்தேர்வில் 60 மதிப்பெண் மட்டுமே வாங்க முடியும் என்று நினைக்கும் மாணவர்கள், பகுதி 2,3,4,5,6,8 12,13 ஆகியவற்றை படித்தால் போதும். பகுதி ஒன்றுக்கு 15 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். பகுதி 2க்கு 45 நிமிடம், பகுதி 3க்கு 50 நிமிடம், பகுதி 4க்கு 55 நிமிடத்தில் பதில் அளித்தால் நல்லது.
தாவரவியல் ஆசிரியர் நாகராஜ்: செல் பயாலஜி மற்றும் மரபியல், உடற்கூறு இயல், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பகுதிகளை நன்றாக படிக்க வேண்டும். ஐந்து, 10 மதிப்பெண் கேள்விகளுக்கு வரைபடம் தேவையென்றால் மட்டும் வரையவும். தண்டு மற்றும் இலைகளின் உடற்கூறு, டி.என்.ஏ.,மாதிரி, திசு வளர்ப்பு தொழில்நுட்பம் பற்றி வரைபடத்தில் கேட்கலாம். வரைபடத்தை தெளிவாக வரைய வேண்டும். படத்தின் பாகங்களையும் குறிப்பிட வேண்டும்.
விலங்கியல் ஆசிரியை இசைவாணி: நுண்ணுயிரியல், நோய் எதிர்ப்பு இயல் பாடத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும். இருதயம், இருதய துடிப்பு கடத்தப்படும் முறை, எச்.ஐ.வி.,அமைப்பு ஆகியவற்றின் வரைபடம் மிக முக்கியம். ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு ஐந்து முக்கிய குறிப்புகளை எழுதினால் போதும். நெப்ரான் பற்றி விரிவாக எழுதச்சொல்லி கேள்விகள் கேட்கப்படலாம்.
கணினி அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி: ‘ஓ.எம்.ஆர்., ஷீட்’டில் அழித்து எழுத முடியாது. மாணவர்கள் மிக கவனமாக ‘ஷேட்’ செய்ய வேண்டும். அதிலே கொடுக்கப்பட்டு இருக்கும் வட்ட வடிவத்தினுள் மட்டுமே ஷேட் செய்ய வேண்டும்.
