விதிமுறைகளை மீறும் அரசு பள்ளி ஆசிரியர்கள்: கல்வித்தரம் பாதிப்பு
விதிமுறைகளை மீறும் அரசு பள்ளி ஆசிரியர்கள்: கல்வித்தரம் பாதிப்பு
UPDATED : நவ 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகத்தில், அரசு விதிமுறைகளை மீறி செயல்படும் சில அரசு பள்ளி ஆசிரியர்களின் அலட்சிய போக்கால், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் 2005-06ம் ஆண்டு கணக்கீட்டின்படி, 33 ஆயிரத்து 984 துவக்கப் பள்ளிகள், 8,877 நடு நிலைப் பள்ளிகள், 4,348 உயர்நிலைப் பள்ளிகள், 4,263 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 51 ஆயிரத்து 472 பள்ளிகள் உள்ளன.
தமிழகம் முழுவதும் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரு கோடியே 40 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 3 லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் பெறுகின்றனர்.
சில எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 ஆசிரியர்கள் தங்களது வகுப்பு மாணவர்களை தன்னிடம் டியூஷன் படிக்க வற்புறுத்துகின்றனர். வகுப்பறைகளை ஓய்வறைகளாக மாற்றும் ஆசிரியர்கள் அதிகாலை 5 முதல் 8 மணி வரையும், மாலை 5 முதல் 10 மணி வரையும் டியூஷன் எடுக்கின்றனர். ஒரு பாடத்திற்கு ஆண்டிற்கு 750 முதல் 1000 ரூபாய் வரையும், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மொத்தமாக 4,000 முதல் 5,000 ரூபாய் வரை டியூஷன் கட்டணம் பெறுகின்றனர்.
கிராமத்தில் தின கூலியாக, 50 முதல் 100 ரூபாய் வரை பெறும் விவசாய மற்றும் கூலி தொழிலாளிகள் தங்களின் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு சிரமங்களுக்கிடையே பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். தங்களின் பிள்ளைகளின் கல்வி நலனுக்கான அதிகாலை 4 மணிக்கே எழுந்து அவர்களுக்கு தேவையான உணவுகளை தயார் செய்து கொடுத்தல், மீண்டும் இரவு 10 மணி வரை காத்திருந்து பிள்ளைகள் வரும் வரை கண் விழித்து, கஷ்டப்படுகின்றனர்.
ஆனால், சில ஆசிரியர்கள் அந்த தொழிலாளிகளின் வியர்வையை மாணவர்கள் மூலம் மூட்டை பூச்சிகளாக உறிஞ்சி எடுக்கின்றனர். இந்த ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடத்தின் தலைப்பை வாசித்து விட்டு, மற்றதை டியூஷனில் நடத்துவார்கள் என வெளிப்படையாக கூறுவதாக அரசு பள்ளி மாணவர்கள் கூறுகின்றனர். இது குறித்து, ஆசிரியர்களிடம் கேட்டால் ‘பிராக்டிக்கல்’ மார்க் குறையும் பயத்தில் மாணவர்கள் அமைதியாக செல்கின்றனர்.
அரசு பள்ளிகளில், மட்டும் தான் 20 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களது திறமைகளையும், அனுபவங்களையும் தங்களிடம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தினால் ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களாக விளங்குவர்.
அரசு பள்ளிகளில், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தும், தனியார் பள்ளிகளில், அனுபவம் இல்லாத ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் மாநில, மாவட்ட அளவில் முதலிடங்கள் பிடித்து டாக்டர்கள், இன்ஜினியர்களாக மாறுகின்றனர். அதிகம் சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் சராசரி மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி கூட பெற முடியாமல் திண்டாடுகின்றனர்.
தனியார் பள்ளிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. கல்வி வளர்ச்சியை அரசால் சாதிக்க முடியாததை, தனி ஒரு மனிதன் தொடங்கும் கல்வி நிறுவனம் சாதித்து வருகின்றது.
