அழகப்பா பல்கலை மறுமதிப்பீடு: விண்ணப்பிப்பதில் குழப்பம்
அழகப்பா பல்கலை மறுமதிப்பீடு: விண்ணப்பிப்பதில் குழப்பம்
UPDATED : ஆக 02, 2013 12:00 AM
ADDED : ஆக 02, 2013 09:32 AM
காரைக்குடி அழகப்பா பல்கலை.,தொலை நிலை கல்வி வழியாக, 54 படிப்புகள் உள்ளன. 212 படிப்பு மையங்கள் உள்ளன. இதற்கான தேர்வு, மே, டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஓரிரு மாதங்களில் வெளியிடப்படுகிறது.
கடந்த மே மாதம் நடந்த தேர்வுகளுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி, அழகப்பா பல்கலை தேர்வாணையம் சார்பில், வெளியிடும் அறிவிப்பில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அழகப்பா பல்கலைகழக தேர்வு விதிகளுக்கு, முரணாக இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாணவர்கள் சிலர் கூறும்போது, "அழகப்பா பல்கலையில், மாணவர் சேர்க்கையின்போது வழங்கப்படும், தகவல் குறிப்பு விளக்க ஏட்டிலும், தேர்வுக்கு முன்பு மாணவர்களுக்கு அனுப்பப்படும் விபரக்குறிப்பிலும், மறு மதிப்பீட்டுக்கு தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம், என உள்ளது.
ஆனால், தற்போது 10 நாட்கள் என வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலர், குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பிக்க முடியாமல், தவித்து வருகின்றனர். மேலும் தேர்வு முடிவு வெளியான அன்று, முடிவுகளை காண முடிவதில்லை.
சர்வரில் அப்லோடு உடனே செய்யப்படாமல், இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகிறது. இதனால், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல், மேற்படிப்புக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, 10 நாட்களா, 15 நாட்களா? என்பதை பல்கலை நிர்வாகம் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.
பல்கலை தேர்வாணையர் உதயசூரியன் கூறும்போது: தொலை நிலை கல்விக்கு 15 நாட்கள் வரை அனுமதி உண்டு. தபால் மூலம் அனுப்புவதில் லேட்டாகும் என்பதால், 10 நாட்கள் என குறிப்பிடுகிறோம். ஆனால், 15 நாட்கள் வரை வரும் தபால்களை ஏற்று கொள்கிறோம்.
இடையில் விடுமுறை இருக்கும் பட்சத்தில், அந்த நாட்களை கூடுதலாக கொண்டு மறுமதிப்பீட்டு கடிதங்களை வாங்கி வருகிறோம். பத்து நாட்கள் தான் என்று மாணவர்கள் இருக்க தேவையில்லை. அப்படி எந்த மாணவர் இருந்தாலும்,அவர்களுக்கு முறைப்படி, தேர்வு முடிவு வெளியிடப்படும், என்றார்.