"இளம் தலைமுறையினர் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்"
"இளம் தலைமுறையினர் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்"
UPDATED : ஆக 03, 2013 12:00 AM
ADDED : ஆக 03, 2013 10:38 AM
தஞ்சாவூர்: "இன்றைய இளம் தலைமுறையினரும் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும், பிறருக்கும் வரலாற்று அறிவை புகட்ட வேண்டும்" என, தஞ்சை நாணய கண்காட்சியில் சோழமண்டல நாணயவியல் கழக நிறுவனர் துரைராசு பேசினார்.
தஞ்சையில், சோழமண்டல நாணவியல் கழகம் சார்பில், 13ம் ஆண்டு விழா, 18வது உலக அளவிலான நாணய கண்காட்சி நேற்று துவங்கியது. சோழமண்டல நாணயவியல் கழக நிறுவனர் மற்றும் புரவலரும் தேசிய நல்லாசிரியருமான துரைராசு பேசியதாவது:
நாணயவியல் கழகத்தின் சார்பில் 13 ஆண்டு முடிந்து, 14ம் ஆண்டாக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. "ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன்" என்னும் பழமொழியை, சிறிது மாற்றம் செய்து, "வரலாறு தெரியாத மனிதன் அரை மனிதன்" என கூறலாம்.
எந்த நாடு, தன் நாட்டின் வரலாற்றை முழுமையாக எழுதி வைத்துள்ளதோ, அந்த நாடே வளர்ந்த நாடாகும். அதன்படி, கிரேக்க நாட்டினர் தான், தங்களது நாட்டின் 3,500 ஆண்டு கால வரலாற்றை முழுமையாக, எதிர்கால சந்ததியினருக்காக குறித்து வைத்துள்ளனர். ஆனால், இந்திய நாட்டின் வரலாற்றை முழுமையாக நாம் எழுதி வைக்கவில்லை.
மாறாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட பண்டைய இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள் மூலம் இந்தியா வரலாற்றை ஓரளவு தொகுத்து அறிய முடிகிறது. வரலாற்றை அறியாத காரணத்தால் தான் பிரிட்டிஷாருக்கு இந்தியா அடிமைப்பட்டது. அதன்பின், ஆங்கிலேயர் அளித்த கல்வியை கொண்டே விழிப்புணர்வு பெற்று, வரலாற்றை அறிந்து, நமது நாட்டினர் சுதந்திரத்துக்காக போராடினர். இதுதான் வரலாறு.
காந்தி, நேரு போன்றவர்கள் இங்கிலாந்து சென்று, பட்டம் பெற்றனர். ஆனால், அதே சமயத்தில் தேச விடுதலைக்காக பெற்ற பட்டங்களை எறிந்துவிட்டு, ஒன்றுதிரண்டு போராடினர். இத்தகைய பல்வேறு நாட்டின் சுதந்திர தலைவர்கள் உருவம் பொறித்த தபால்தலைகள், வரலாறு, பண்பாடு, பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் நாணயங்கள், நினைவுச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை இன்றைய இளம் தலைமுறையினரும் அறிந்து, வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். பிறருக்கும் வரலாற்று அறிவை புகட்ட வேண்டும். பழமையான பொருட்கள், அரிய பொருட்கள், தபால் தலைகள், நாணயங்களை சேகரிக்கும் ஆர்வத்தை பெருக்குவதன் மூலம் வரலாற்று தகவல்களை பாதுகாக்க முடியும். இதற்கு, நாணயவியல் கண்காட்சி உந்துசக்தியாக விளங்கும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, நாணயவியல் கண்காட்சி வரும் 4ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. காலை 10 மணி முதல் ஆறு மணி வரை கண்காட்சி நடத்தப்படும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் எனவும், பள்ளி மாணவ, மாணவியருக்கு நாணயவியல் கல்வி வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும், சோழமண்டல நாணயவியல் கழக நிர்வாகிகள் அறிவித்தனர்.
நாணயவியல் கழக நிர்வாகிகள், ஆர்வலர்கள், பள்ளி மாணவ, மாணவியர் தாங்கள் இதுவரை பாதுகாப்பாக பல வருடங்கள் சேகரித்து வைத்திருந்த நாணயங்கள், அபூர்வ தபால் தலைகள், படிமங்கள், 40 ஆண்டு அதிசய நாட்காட்டி மற்றும் சிலம்பு, பாக்குவெட்டி உள்ளிட்ட பழமையான பொருட்கள், நினைவுச் சின்னங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.