UPDATED : ஆக 03, 2013 12:00 AM
ADDED : ஆக 03, 2013 11:25 AM
ஊட்டி: விளையாட்டில் சாதிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத் தொகையை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2013-14ம் கல்வியாண்டில், உயர்நிலை, மேல்நிலை, பல்கலைக் கழகங்களில் பயிலும், தகுதியுடைய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, ஊக்க உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதை பெறுவதற்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி, உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் படிக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர் அல்லாதோருக்கு 10 ஆயிரம் ரூபாய், கல்லூரி, பல்கலை., விளையாட்டு வீரர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதன்படி, 1.7.2012 முதல் 30.6.2013 மாதம் வரையிலான, கால கட்டத்தில் விளையாட்டு துறையில் வெற்றிகள் பெற்று தகுதி, திறமை கொண்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகம் மற்றும் இந்திய விளையாட்டு குழுமத்தால் நடத்தப்படும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலை கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்திற்கான தொகை 10 ரூபாயை செலுத்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில், அசல் சான்று மற்றும் நகலுடன் நேரில் சமர்பிக்க வேண்டும்." இவ்வாறு, குமார் கூறியுள்ளார்.