ஆண், பெண் சமத்துவம் அமெரிக்காவில் எப்படி இருக்கிறது?
ஆண், பெண் சமத்துவம் அமெரிக்காவில் எப்படி இருக்கிறது?
UPDATED : ஆக 04, 2013 12:00 AM
ADDED : ஆக 04, 2013 08:34 AM
பிற நாடுகள் மீது, அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவது போலத் தெரிகிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் சாரம் என்ன? - சந்திரசேகர், சேலம்
அமெரிக்க மக்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் பலன் அளிக்கும் வகையில், சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டது, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை.
சர்வதேச கட்டமைப்புக்கு உட்பட்டு பொறுப்புடன் இயங்குமாறும், பரவலான வறுமையைக் குறைக்குமாறும், மக்களின் தேவையை உணர்ந்து திறம்படச் செயல்படும் நாடுகள் இணைந்த வளமான, பாதுகாப்பான, ஜனநாயகம் தழைத்தோங்கும் உலகைக் கட்டமைக்கவும், பாதுகாத்திடவும் அமெரிக்கா உதவுவதைக் குறிப்பதே அக்கொள்கை.
எங்கள் சர்வதேச கூட்டாளி நாடுகளுடன் இணைந்து, 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் தனிச் சிறப்புகளில் ஒன்றான புத்தாக்கம் மூலம், பாரம்பரியமாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டும் வரும் வெளியுறவுக் கொள்கையில், புதிய அணுகுமுறைகளை அமெரிக்க அரசு வகுத்து வருகிறது.
ஒன்றோடு, ஒன்று இணைந்த இன்றைய உலகின் குடிமக்கள் அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில், உத்வேகத்துடன் இயங்கும் கட்டமைப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்ததாக அவை இருக்கும்.
ஆண், பெண் சமத்துவம் அமெரிக்காவில் எப்படி இருக்கிறது? எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேறியிருக்கிறார்களா? - பத்மாவதி, ஈரோடு
உலகெங்கிலும் உள்ள பெண்களைப் போல, அமெரிக்கப் பெண்களும் தொழில்சார் மற்றும் சமூகத் தளங்களில், ஆண்களுக்கு நிகரான இடத்தை இன்னும் அடையவில்லை. பால் சமத்துவம் நோக்கிய இக்குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
சமூகத்தில் நிலவும் பாகுபாடு என்ற முக்கியப் பிரச்னையைத் தீர்ப்பதென்பது, சமூகத்தின் அனைத்து அங்கங்களையும் உள்ளடக்கியது என்பதை, அமெரிக்க வரலாறு உணர்த்தியிருக்கிறது. அரசு, தனியார் துறை மற்றும் தனிநபர்கள் ஒருங்கிணைந்து, உத்வேகத்துடன் செயல்பட்டால்தான் அது சாத்தியம்.
1960களில் குடிமுறை (சிவில்) உரிமை இயக்கம் துவங்கியதிலிருந்தே, அமெரிக்க அமைப்புகள் சிறுபான்மையினர், பெண்கள் உட்பட அனைத்துக் குடிமக்களுக்கும், சமஉரிமைகளை அளிப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றன.
இது ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகளை, பெண்களும் அடைவதற்கு உதவும் வகையில், சமூகப் பார்வையிலும் மாற்றத்தை ஏற்படுத்திஇருக்கிறது. அமெரிக்காவில் பணியிடங்களில், ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில், பெண்களும் பணியாற்றுவதை இன்று, நாம் பார்க்க முடிகிறது.
அடுத்த ஐந்தாண்டுகளில், அமெரிக்காவின் வளமைக்குப் பங்களிக்கும் வகையில், பெரும்பான்மையான வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்கள், பெண் தொழில் முனைவோர்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இந்தியாவைப் போல, அமெரிக்காவிலும், அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத் தளங்களில், தலைசிறந்த பெண் தலைவர்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்.
மக்கள் தொகை அடிப்படையில் குறைவாக இருந்தாலும், உலக வளங்களை அமெரிக்கா அதிக அளவில் பயன்படுத்துகிறதே? - ஜெயப்பிரகாஷ், கோவை
அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே, நிலையான வளங்களைக் கண்டறிவதற்கான அவசியத்தை யும், இருப்பிலுள்ள வளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டியதையும் நன்கு உணர்ந்திருக்கின்றன. பசுமைக் கட்டடங்களை உருவாக்குவது மற்றும் சுத்தமான எரிசக்தியைப் பரவலாக்குவது தொடர்பாக, இந்தியாவுடன் இணைந்து செயலாற்றுவதில், அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது.
உலகின் பெரும் பொருளாதார சக்திகளாகத் திகழும் நாடுகளில், அமெரிக்காவும், இந்தியாவும் சீரான பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வது தொடர்பான கேள்விகளை எதிர்கொண்டு வருகின்றன. இருதரப்புக்கும் பலனளிக்கும் வகையில், இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் முன்னேற்றம் காண முடியும்.
சமீபத்தில், இந்தியா வந்திருந்த போது, ஜூன் 23-ம் தேதி புதுடில்லியில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுத்தமான எரிசக்தியை உருவாக்குவதற்காகச் செய்யப்படும் முதலீடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக, இத்துறையில் வேலைவாய்ப்பைப் பெருக்குவதுடன், எரிசக்திக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்தி, தொழில் நிறுவனங்கள் லாபத்தை உயர்த்த உதவும் என்றார். ஜூன் 23-ம் தேதி ஆற்றிய ஜான் கெர்ரியின் உரையைக் கேட்க, காண்க: http://www.state.gov/secretary/remarks/2013/06/211013.htm
அமெரிக்காவிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல விரும்புகிறேன். குறைந்த செலவில் அந்த இடங்களுக்குச் சென்றுவர ஏதேனும் வழி இருக்கிறதா? இந்த விஷயத்தில் அமெரிக்க அரசு உதவி புரியுமா? -செந்தில், கோவை
எல்லா வகையான பயணிகளுக்கும் அவர்களின் ஆர்வங்களை நிறைவேற்றும் விதத்தில், அமெரிக்கா பயண வாய்ப்புகளை வழங்குகிறது. அமெரிக்கா வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவின் வரலாறு பற்றி அறியலாம். அமெரிக்காவிலுள்ள பல இயற்கை அதிசயங்கள், ஓவிய, கட்டடக் கலைகள், கடற்கரைகள் ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம். அத்துடன் விதவிதமான உணவு வகைகள் மற்றும் ஒயின் ஆகியவற்றைச் சுவைக்கலாம்.
இயற்கை எழில் மிகுந்த இடங்களை பயணத்தின் வழியாகக் கண்டு மகிழலாம்.
எத்தகைய ஆர்வமுள்ளோருக்கும், அமெரிக்காவில் உரிய சுற்றுலாத் தலங்கள் உண்டு. சுற்றுலாப் பயணியாக அமெரிக்காவுக்குச் செல்ல விரும்புகின்றவர்களுக்கு, அமெரிக்க அரசு நிதி உதவி எதுவும் அளிப்பதில்லை. பயணிகளின் நிதி நிலைமைக்கு ஏற்ப, பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்வதற்குப் பல வாய்ப்புகள் உள்ளன.
அமெரிக்கப் பயணம் மற்றும் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது குறித்த விரிவான விவரங்களை, "டிஸ்கவர் அமெரிக்கா&' இணையதளத்தில் காணலாம்: www.discoveramerica.com
இங்குள்ள நிறுவனம் சார்பாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு வேலை பார்க்கும் ஒருவரின் சம்பளத்துக்கு வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை அமெரிக்காவிலிருந்து, இங்கு கொண்டு வருவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? - கார்த்திக், சென்னை
வரி செலுத்துவது என்பது, குடியுரிமை நிலை மற்றும் பணிபுரியும் இடம் ஆகிய இரண்டு காரணங்களைப் பொறுத்து அமையும். அமெரிக்காவில் வசிக்கும் எவரும், குடியுரிமை (அதாவது அமெரிக்கவாழ் குடியுரிமை பெறா அயல்நாட்டவர்) சார்ந்து அன்றி, அமெரிக்க குடிமகன்கள் எவ்வாறு வரி செலுத்துகிறார்களோ அவ்வாறே வரி செலுத்த வேண்டும்.
குடியுரிமை பெறா அயல் நாட்டவர் (வேலை நிமித்தம் அமெரிக்காவில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் குடியுரிமை அல்லாதவர்கள்), அமெரிக்காவில் பணியிலிருந்தால், அங்கு அவர்கள் ஈட்டும் வருமானக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாகாணமும் வெவ்வேறு வரிச் சட்டங்களைக் கொண்டிருக்கும்.
அது பற்றித் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அமெரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பும் பயணிகள், தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை எடுத்துச் செல்லலாம். ஆனால், இந்தியாவில் அதற்குரிய சுங்க வரியைச் செலுத்த வேண்டும்.
அமெரிக்காவில் ஒருவர் தங்கியிருந்த காலம் குறைந்தபட்சம், 6 மாதங்களாவது இருப்பின், அவர் 10 கிலோ தங்கம் வரை இந்தியாவுக்கு எடுத்து வரலாம். இரு நாடுகளுக்கிடையிலான, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், அமெரிக்க மற்றும் இந்திய அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.