UPDATED : ஆக 04, 2013 12:00 AM
ADDED : ஆக 04, 2013 08:50 AM
பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தரவு: மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்கும், அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்துவதற்கும், சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம், மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. வரும், 12ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சதுரங்க விளையாட்டு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வரும், 23ம் தேதி, பள்ளி அளவில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, போட்டிகள் நடத்த வேண்டும். பின், படிப்படியாக கல்வி மாவட்ட அளவிலான போட்டி, வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகள் என, வரும் அக்., 22ம் தேதி வரை, பல்வேறு நிலைகளில், போட்டிகளை நடத்த வேண்டும்.
மாநில அளவிலான போட்டியை, நவம்பர் மாதம் நடத்த வேண்டும். மண்டல அளவில், முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர், வயது பிரிவு வாரியாக, மாநில போட்டிகளில் பங்கேற்கலாம். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.