UPDATED : ஆக 05, 2013 12:00 AM
ADDED : ஆக 05, 2013 10:25 AM
பாகனேரி: பாகனேரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் இருந்தும், கூடுதல் பஸ் வசதியின்றி பணம் கொடுத்து கல்லலுக்கு செல்லவேண்டியுள்ளது.
பாகனேரி மற்றும் சுற்றியுள்ள கூமாச்சிப்பட்டி, நெற்புகப் பட்டி, முத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லலுக்கு படிக்க செல்கின்றனர். காரைக்குடியிலிருந்து கல்லல், முத்துப்பட்டி வழியாக பாகனேரிக்கு மாலை ஒரு தடவை மட்டும் 6 "பி" பஸ் செல்கிறது. காலையில் மாணவர்கள் செல்வதற்கு பஸ் பாஸ் வசதியிருந்தும் இந்த ஒரு பஸ் தவிர, கூடுதல் பஸ் வசதியின்றி, பணம் கொடுத்து மினி பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் செல்லவேண்டியுள்ளது.
மேலும், இப்பகுதியினர் கல்லல் ஒன்றிய அலுவலகம், மின்வாரிய அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் கல்லலை சார்ந்து இருப்பதால் கூடுதல் பஸ் வசதி இன்றி, 8 கி.மீ தூரத்திற்கு, 15 கி.மீ சுற்ற வேண்டியுள்ளது. மாலையில் இயக்கப்படும் காரைக்குடி-பாகனேரி டவுன் பஸ்சை காலையில் பள்ளி நேரத்தை கணக்கீட்டு இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.