UPDATED : ஆக 07, 2013 12:00 AM
ADDED : ஆக 07, 2013 10:16 AM
திருக்கழுக்குன்றம்: அரசுப் பள்ளிகளில் உள்ள பெண்கள் கழிப்பறையில், சானிடரி நாப்கின் எரியூட்டிகள் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 352 நடுநிலைப் பள்ளிகள், 165 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 165 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் பயிலும் மாணவியரின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், துணை சுகாதார மையங்கள் மூலம், சானிடரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரிப்பதற்கு, ஒவ்வொரு பள்ளியிலும், பெண்கள் கழிப்பறைகளில் எரியூட்டிகள் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. அதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், புதியதாக கட்டப்படும் பள்ளி கழிப்பறைகளுடன் எரியூட்டிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ஏற்கனவே கழிப்பறைகள் கட்டப்பட்ட, 490 பள்ளிகளில், இதுவரை சானிடரி நாப்கின் எரியூட்டிகள் அமைக்கப்படவில்லை. இதனால், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை கழிப்பறையில் வெளியேற்றப்படுவதால், கழிவுநீர் உறிஞ்சு தொட்டிக்கு செல்லும் குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு, கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, மேற்கண்ட பள்ளிகளில், பெண்கள் கழிப்பறையில், நாப்கின் எரியூட்டிகள் அமைக்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், "சுகாதார ஒருங்கிணைப்பாளரின் தொழில்நுட்ப ஆலோசனை பெற்று, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம், சானிடரி நாப்கின் எரியூட்டி இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்து, விரைவில், எரியூட்டிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

