எளிய மக்களின் வரலாறை அறிய முயற்சிக்க வேண்டும்: நியூசிலாந்து பேராசிரியர்
எளிய மக்களின் வரலாறை அறிய முயற்சிக்க வேண்டும்: நியூசிலாந்து பேராசிரியர்
UPDATED : ஆக 08, 2013 12:00 AM
ADDED : ஆக 08, 2013 07:55 AM
சென்னை பல்கலையின், இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில், "புதிய பொதுவுடைமையை நோக்கி - ஆனந்த் பட்வர்த்தனின் அரசியல் ஆவண படங்களும், ஹர்ட் மற்றும் நெக்ரியின் கருத்தாக்கங்களும்" என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
இதில், நியூசிலாந்து, ஓட்டாகோ பல்கலையின் ஊடகம், திரைப்படங்கள் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர், விஜய் தேவதாஸ், சிறப்பு விருந்தினராகப் பேசினார். இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவர், கோபால் ரவீந்திரன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
விஜய் தேவதாஸ் பேசியதாவது: நம் நாட்டின் மிகச் சிறந்த ஆவணப்பட தயாரிப்பாளர்களில் முக்கியமானவர், ஆனந்த் பட்வர்த்தன். இவருடைய அரசியல் ஆவணப் படங்களில், ஊழல், இனச் சண்டைகள், ஜாதியம் பற்றிய விமர்சன ரீதியான கருத்துக்கள், இவரை, மிகச்சிறந்த மனிதராக அடையாளப்படுத்தின.
இவரின் முதல், "புரட்சியின் அலைகள்" என்ற ஆவணப்படம், 1974ல், பீகாரில் நடந்த ஊழலுக்கு எதிரான போராட்டத்தை, மையமாகக் கொண்டது. தந்தை, மகன் மற்றும் தெய்வம் தொடர்பான, போர்-1995, போரும் அமைதியும்- 2002, ஜெய் பீம் காம்ரேட்- 2012, போன்ற இவரின் ஆவணப் படங்கள், உலக அளவில் பல்வேறு பரிசுகளை பெற்ற, அரசியல் ஆவணப் படங்கள்.
இவருடைய ஆவணப் படங்கள், நிகழ்கால அரசியல் பிரச்னைகளின் உண்மைத்தன்மையை எடுத்துரைத்ததால், தூர்தர்ஷன் தொலைக்காட்சியால் தடை செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்ற பின்னரே, இவருடைய ஆவணப் படங்களை, திரையிடுவதற்கு அனுமதி கிடைத்தது.
இருந்தாலும், பெரும்பாலானோர் ஓய்வெடுத்து உறங்கும், ஞாயிற்றுக்கிழமை, இரவு, 11:00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. நம் நாட்டில், திரைப்பட தணிக்கை குழுக்கள், ஒரு சார்பாக செயல்படுவது, இப்பிரச்னையின் மூலம், வெளி உலகுக்கு வந்தது.
நம் நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கு, தேசியம் என்ற போர்வை தேவைப்படுகிறது. தேசியம், எளிய மக்களை, எப்போதும், புறக்கணித்தே வந்திருக்கிறது. ஆனந்த் பட்வர்த்தனின், அரசியல் ஆவணப் படங்கள், அதை கேள்விக்குள்ளாக்கியது.
என் ஆரம்ப கால கல்வியில், சிங்கப்பூர் ஆரம்ப பள்ளி பாடத்தில், "19 ஆம் நூற்றாண்டில், இந்தியர்கள் அனைவரும், பிழைப்புக்காக சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு வந்தனர்" என குறிப்பிட்டிருந்தது. ஆனால், கல்லூரி காலம் முடிந்த பிறகு, நூலகங்களில், பழைய ஆவணங்களையும், செய்தித் தாள்களையும் ஆய்வு செய்த போது, ஆங்கிலேயர்கள், இந்தியர்களை, வலுக்கட்டாயமாக இழுத்து வந்தது, தெரியவந்தது.
ஆதிக்க சக்திகள் எழுதிய, வரலாற்றையே நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆதிக்க வரலாறே, நம்மிடம் இருக்கிறது. எளிய மக்களின் உண்மையான வரலாற்றை அறிவதற்கு, முயற்சி செய்ய வேண்டும். ஆனந்த் பட்வர்த்தனின் அரசியல் ஆவணப் படங்கள், அதற்கு துணை நிற்கும்.
புதிய பொதுவுடைமையை நோக்கி, அவருடைய, அரசியல் ஆவணப் படங்கள் செல்கின்றன. புதிய பொதுவுடைமை எனில், புதிய பொருளியல் தத்துவம் அல்ல; அது சமநீதி சமூக தத்துவம். இவ்வாறு, அவர் பேசினார்.
