கல்லூரியில் கண்காணிப்பு காமிரா: செனட் கூட்டத்தில் கடும் விவாதம்
கல்லூரியில் கண்காணிப்பு காமிரா: செனட் கூட்டத்தில் கடும் விவாதம்
UPDATED : நவ 27, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: கல்லூரிகளில் கண்காணிப்பு காமிரா வைப்பதற்கு செனட் கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதுரை காமராஜ் பல்கலை., செனட் கூட்டம் நவ. 26ம் தேதி துணைவேந்தர் கற்பககுமாரவேல் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், ஒத்தி வைப்பு தீர்மானத்தின் மீது பலர் பேசினர்.
உறுப்பினர் கே.சுப்புராஜ்: தொலை நிலை கல்வியில் பி.எட்., ஆங்கிலம் வழியில் படிக்க 500 சீட்களை துணைவேந்தர் பெற்றார். இதேபோல தமிழ் வழியில் கற்கவும் 500 சீட்களை பெற வேண்டும். பள்ளிகளில் பி.எட்., தகுதி இன்றி ஒருலட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எம்.எட்., படிப்பையும் கொண்டு வரவேண்டும்.பல்கலை.,யில் ஆசிரியர், ஊழியர்கள் காலிப்பணியிடம் ஏராளமாக உள்ளது. பணியாற்றும் பேராசிரியர்களில் பலர் பல துறைகளின் இயக்குனர், டீன், துணைப்பதிவாளர் என பதவி வகிக்கின்றனர்.
இனியாவது இடஒதுக்கீடு அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்துவது, படித்த இளைஞர்களை ஏமாற்றுவது போன்றது. உறுப்பினர் விவேகானந்தன் பேசுகையில்: தமிழகத்தில் 52 லட்சம் பேர் வேலையில்லாதவர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்றவரை பணிநியமனம் செய்யக் கூடாது.
உறுப்பினர் தியாகராஜன்: மாணவர் பேரவை தேர்தல் நடத்த வேண்டும். விருதுநகர் கல்லூரி ஒன்றில், வகுப்பறை, நுõலகம், ஆய்வகம் போன்றவற்றில் காமிரா பொருத்தி மாணவர், ஆசிரியர்களை கண்காணிக்கின்றனர். அடையாள அட்டை வைத்திருக்கும்படியும், பயோமெட்ரிக் முறையில் அட்டெண்டன்ஸ் என நடத்துகின்றனர். இது மனித உரிமை மீறல்.
உறுப்பினர் விவேகானந்தன்: அனைத்து கல்லூரிகளுக்கும் மாணவர் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான கால அட்டவணையை அனுப்ப வேண்டும். கண்காணிப்பு காமிராவை உடனடியாக அகற்ற வேண்டும்.
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன்: ‘பயோமெட்ரிக்., அட்டெண்ட்டென்ஸ் ஆசிரியர்களுக்காகத்தான் வைக்கப்பட்டுள்ளது. வளியாட்களை தெரிந்து கொள்ளவேஅடையாள அட்டை வழங்கப்படுகிறது. காமிராவை பொறுத்தவரை பாரதியார் பல்கலை.,யின் 30 கல்லூரிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர் கூறியது போல மனித உரிமை மீறல் என்பது இல்லை. கேரளாவில் பல்கலை., சட்டங்களிலேயே தேர்தல் நடத்த வேண்டும் என்று உள்ளது. அதனடிப்படையில் வந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் பல்கலை.,யின் உறுப்பு கல்லூரியில்தான் தேர்தல் நடத்துவது பற்றி கூறப்பட்டுள்ளதே தவிர, இணைவிப்பு கல்லூரிகளைப் பற்றி கூறவில்லை. லிங்டோ கமிட்டி அறிக்கையிலும் சொல்லப்படவில்லை. இதைத் தொடர்ந்து மாணவர் பேரவை தேர்தல் தேவை என உறுப்பினர்கள் பரமன், ராஜமாணிக்கம், ஆண்டிவேலவன் ஆகியோர் ஆதரித்து பேசினர்.
சமூகஅறிவியல் கல்லூரி முதல்வர் நாராயணராஜா: சுப்ரீம் கோர்ட் லிங்டோ கமிட்டி சிபாரிசை எங்கெல்லாம் மணவர் தேர்தல் நடைமுறையில் உள்ளதோ அங்கெல்லாம் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தியது. எல்லா கல்லூரியிலும் தேர்தல் நடத்த வேண்டும் என எங்குமே வலியுறுத்தவில்லை. இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
முன்னதாக வக்புவாரிய கல்லூரியில் பதவிநீக்கம் செய்யப்பட்டு, திண்டுக்கல் ரமாபிரபா கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் இஸ்மாயில், அகாடமி கவுன்சில் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராக நீடிக்கக் கூடாது என உறுப்பினர்கள் விவேகானந்தன், தியாகராஜன், பரமன் உட்பட பலர் பேசினர். இதற்கு பதிலளித்த துணைவேந்தர் கற்பககுமாரவேல், ‘இதுகுறித்து இருவரிடம் சட்ட ஆலோசனை பெற்றதில் ஒருவர் நீடிக்கலாம் என்றும், ஒருவர் நீடிக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே எனக்குள்ள அதிகாரத்தின்படி இதனை வேந்தரது (கவர்னர்) பரிசீலனைக்கு விடுகிறேன்’ என்று சர்ச்சையை முடித்து வைத்தார்.
