கல்வி உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு; நலவாரிய தொழிலாளர்கள் புகார்
கல்வி உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு; நலவாரிய தொழிலாளர்கள் புகார்
UPDATED : ஆக 12, 2013 12:00 AM
ADDED : ஆக 12, 2013 12:15 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாக, புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர் நலவாரியம் செயல்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த நல வாரியத்தில் வீட்டுப்பணியாளர், காய்கறி வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் உள்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வகை தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நலவாரிய தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தமிழக அரசு, விபத்து காப்பீடு திட்ட உதவித்தொகை, இயற்கை மரண உதவி, ஈமச்சடங்கு உதவி, குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவி, மகப்பேறு உதவி, ஒய்வூதியம் உட்பட உதவித்தொகை வழங்குகிறது.
கடந்த ஆண்டு, இந்த நலவாரிய தொழிலாளர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைக்கு கேட்டு உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தனர். இவர்களில், 50 சதவீதம் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. சில தொழிலாளர்களுடைய நலவாரிய அடையாள அட்டை புத்தகத்தில், கல்வி உதவித்தொகை வழங்கியதிற்கு அத்தாட்சியாக உதவித்தொகையை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உதவித்தொகை தொழிலாளர்கள் கணக்கில் வங்கிகளிலும் வந்து சேரவில்லை.
இதுகுறித்து நலவாரிய தொழிலாளர்கள் கூறியதாவது: "எஸ்.எஸ்.எல்.ஸி., பிளஸ் 2 படிக்கும் நலவாரிய தொழிலாளர்கள் பெண் குழந்தைகளுக்கு, ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், கல்லூரி படிக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு 1,500 ரூபாயும், விடுதியில் தங்கி படிக்கும் குழந்தைகளுக்கு, 2,000 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரையும் வழங்கப்டுகிறது.
இந்த உதவித்தொகை ஆண்டுதோறும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர் நல அலுவலகம் வழங்குகிறது. சென்ற ஆண்டு விண்ணப்பித்த பெரும்பான்மையான பள்ளி குழந்தைகளுக்கு, இன்னும் வழங்கப்படவில்லை.
அதிகாரிகளிடம் கேட்டால் உதவித்தொகை இன்னும் வரவில்லை என்கின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலக தொழிலாளர் நலவாரிய கூட்டத்தில், அதிகாரிகள் உதவித்தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது, என கூறி அலைக்கழிக்கின்றனர்.
இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, கலெக்டர் உரிய ஆய்வு நடத்தி நலவாரிய குழந்தைகள் பள்ளி குழந்தைகளுக்கு தாமதம் இல்லாமல் கல்வி உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட கண்காணிப்பாளர் ராகவனிடம் கேட்டபோது: "முழுமையாக அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. சிலருக்கு அவர்களுடைய தவறுகளால் வராமல் இருக்கலாம். சிலர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வங்கி கணக்கை பராமரிக்க வேண்டும். பராமரிக்காவிட்டால் அந்த வங்கி கணக்கை ரிசர்வ் வங்கி நிறுத்தி விடுகிறது. அதனால், அந்த கல்வி உதவித்தொகை பணம் மீண்டும் எங்களுக்கே திரும்பி வந்து விடுகிறது. உதவித்தொகை கிடைக்காதவர்கள் அலுவலகத்திற்கு வந்து புகார் செய்தால் தேவையான வழிமுறைகள் வழங்கப்படும்," என்றார்.
