‘ஆசிரியர் பணி என்பது ஒரு வாய்ப்பு’: கிருஷ்ணராஜ் வாணவராயர்
‘ஆசிரியர் பணி என்பது ஒரு வாய்ப்பு’: கிருஷ்ணராஜ் வாணவராயர்
UPDATED : நவ 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ) சார்பில் ‘பள்ளிகளில் சிறந்த கல்வி’ குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
பி.எஸ்.ஜி. மேலாண்மை கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் அரசு, தனியார், மாநகராட்சிப் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். தற்போதைய கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும், இதில் ஆசிரியர்களின் பங்கு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
நிறைவு விழாவில் பாரதீய வித்யா பவன் சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசியதாவது:
சரியான கல்வி இருந்தால் அனைத்தும் சரியாக நடைபெறும். ஆனால் அது ஒரு சவாலாகவே உள்ளது. இச்சவாலை அடைய தேவையான மாற்றம், மெதுவாகதான் நிகழும். இந்த மாற்றம் நடந்தாக வேண்டும். உங்களால் உங்களை மாற்றிக் கொள்ள முடிந்தால் அனைத்தும் மாறும்.
எண்ணங்களில் மாற்றம் வராமல் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்து விடாது. எண்ணங்களில் மாற்றம் வர, சுயதிருப்தி முக்கியம். அனைத்தும் மனதில்தான் உள்ளது. ஆசிரியர் பணி என்பது பணியே அல்ல; அது ஒரு வாய்ப்பு. வாய்ப்பாக கருதினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
ஆசிரியர் என்பவர் அறிவின் கிடங்கு. குழந்தைகளின் எதிர்காலம் 100 சதவீதம் ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. ஆசிரியராக இருக்க ஆசையும், அத்தொழிலில் அர்ப்பணிப்பும் இருந்தால், கற்பிக்கும் கல்வியில் தானாக சிறப்பு வரும். பணத்தால் சிறந்த வசதிகள் கொண்ட கல்வி நிறுவனத்தை உருவாக்கலாம். கற்பிக்க சரியான ஆசிரியர் இல்லை என்றால் அனைத்து வசதிகளும் வீண்தான். கல்வி குறித்த சரியான புரிதல் கொண்ட ஆசிரியர் தேவை.
ஒரு கல்வி நிறுவனத்தின் நிர்வாகி, முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஒரு தெளிவான பொது லட்சியம் இருக்க வேண்டும். இந்த லட்சியத்தை அனைவரும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும். 100 சதவீத தேர்ச்சி தரும் பள்ளிதான் சிறந்த பள்ளி என்ற எண்ணம் மாற வேண்டும். எதிர்காலம் குறித்து மாணவர்களை கனவு காண செய்வதாகவும் சமுதாய மேம்பாட்டுக்கு பாடுபட தூண்டுவதாகவும் கல்வி அமைய வேண்டும்.
கிராமங்களில் இன்னும் மரத்தடி வகுப்புகள் உள்ளன. அங்குதான் இந்தியா வாழ்கிறது. கிராமங்களை சரி செய்யாமல் தேசத்தை சரி செய்ய முடியாது. வகுப்பறையில் ஊக்குவிப்பும், ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியும் இருந்தால் கல்வி தரத்தில் மாற்றம் தானாக நிகழும். இவ்வாறு, கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.
சி.ஐ.ஐ.கோவை மண்டல துணைத் தலைவர் ரவி சாம், மூத்த கல்வி ஆலோசகர் செந்தில் குமரன், கல்விக்குழு கன்வீனர் நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
