UPDATED : ஆக 14, 2013 12:00 AM
ADDED : ஆக 14, 2013 05:50 PM
லண்டன்: இயற்கை தாவரங்களைப் போலவே, வளரும் வேர்களை கொண்ட, செயற்கை, ரோபோ செடிகளை, இத்தாலிய ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இயற்கையில் முளைக்கும் தாவரங்கள், சூரிய ஒளி, நீர், மண், காற்று ஆகியவற்றின் உதவியுடன், பூமியில் கிடைக்கும் இயற்கை சத்துக்களை உறிஞ்சி, உயிர் வாழ்கின்றன. நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்ச, வேர்கள் உறுதுணையாக உள்ளன. இவ்வகை வேர்கள், தாவரங்களுக்கு தேவையான பொருட்கள், பூமிக்கு அடியில் எங்கெல்லாம் கிடைக்கும் எனக் கண்டறிய, பல கிளைகளை பரப்பி, தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றன.
வெவ்வேறு கிளை வேர்களும், தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக, தாவரவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இவ்வகை தகவல் பரிமாற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன, எந்தெந்த வகையான பொருட்களை எவ்வகை வேர்கள் உறிஞ்சிப் பெறுகின்றன போன்ற தகவல்கள், மர்மமாகவே உள்ளன.
தாவர வேர்களின் செயல்பாட்டை கண்டறியவும், அவற்றின் தகவல் பரிமாற்றம் பற்றிய நிகழ்வுகளை ஆராய்வதற்கும், இயற்கை தாவரங்களைப் போலவே, செயற்கை முறையில், ரோபோ செடிகளை, இத்தாலி நாட்டுஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: "ரோபோ செடிகள், வளரும் தன்மை கொண்டவை. இவற்றின் வேர்களும் பூமிக்கு அடியில் கிளை விட்டு வளரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், புவி ஈர்ப்பு விசை, பூமிக்கு அடியில் இருக்கும் நீரின் அளவு மற்றும் தன்மை, அடிப்பகுதியில் நிலவும் வெப்பநிலை, அமில - கார தன்மையை கண்டறியும், பி.எச்., மதிப்பு, நைட்ரேட் மற்றும் பாஸ்பேட்டின் அளவு போன்ற, அனைத்து வகை தகவல்களையும் பெற முடியும்.
இயற்கை வேர்களின் தகவல் பரிமாற்றம் பற்றிய செய்திகளையும், இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்; இதன் மூலம், சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்க முடியும்; சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்." இவ்வாறு அவர்கள் கூறினர்.
