கோவை மாவட்டத்தில் ‘மொபைல் சயின்ஸ் லேப்’ திட்டம் முடக்கம்
கோவை மாவட்டத்தில் ‘மொபைல் சயின்ஸ் லேப்’ திட்டம் முடக்கம்
UPDATED : நவ 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: விண்வெளிக்கு ‘சந்திராயன்’ விண்கலம் அனுப்பி கோவை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சாதனை புரிந்து கொண்டிருக்கையில், அதே மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன் வளர்ப்பதற்கான ‘மொபைல் சயின்ஸ் லேப்’ திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் ‘மொபைல் சயின்ஸ் லேப்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென அனைத்து மாவட்ட துவக்க கல்வி அலுவலகங்களுக்கும் ‘அறிவியல் வேன்’ வழங்கப்பட்டுள்ளது.
பல கிராமப்புற பள்ளிகளில் அறிவியல் சோதனைகள் புத்தகத்தின் மூலம் மட்டுமே விளக்கப்படுகின்றன. நேரடியாக விளக்க ஆய்வக வசதிகள் இல்லை. இந்த குறையை போக்கி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் திறனையும் பெருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இந்த வேனில் அடிப்படை அறிவியல் சோதனைகள் நடத்த உதவும் உபகரணங்கள் உள்ளன. அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நேரில் செல்லும் இந்த வேனின் உதவியுடன், அறிவியல் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முக்கிய அறிவியல் சோதனைகள் செய்து காட்டுவர்.
அறிவியல் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்கள் இதன் வாயிலாக தீர்த்து வைக்கப்படுகிறது. இதற்கென பிரத்யேகமாக அறிவியல் உதவி கல்வி அலுவலரும் உண்டு. வேன் செயல்படாததால் இவருக்கும் பெரிதாக வேலை எதுவும் இல்லை.
கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ‘மொபைல் சயின்ஸ் லேப்’, எந்த பள்ளிக்கும் செல்வதில்லை. டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆண்டுக்கணக்கில் சும்மா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேனில் உள்ள அறிவியல் பரிசோதனைக் கருவிகள், தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலக அறையில் துருப் பிடித்து, தூசு படிந்து பாழாகி வருகிறது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “சயின்ஸ் வேனை இயக்க டிரைவர் நியமிக்கப்படவில்லை. தனியாக வேறு டிரைவரை நியமித்தால் அவருக்கு சம்பளமாக ரூ.3,000 மட்டுமே கொடுக்க அரசு அனுமதி உள்ளது. இவ்வளவு குறைந்த சம்பளத்தில் பணிபுரிய ஓட்டுனர்கள் வர மறுக்கின்றனர்,” என்றனர்.
அனைத்து மாணவர்களும் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போல் அறிவியல் மேதைகளாக வர வேண்டும் என வகுப்பறையிலும் கல்வி கருத்தரங்கு மேடைகளிலும் முழங்குவதோடு சரி. அறிவியல் மேதைகளாக மாணவர்களை மாற்ற தேவையான இது போன்ற முக்கிய வசதிகளும் கிராமப்புற மாணவர்களை சென்றடைய வேண்டும்.
ஆண்டுக்கணக்கில் கேட்பாரற்று கிடக்கும் இந்த அறிவியல் வேன் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரோ, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரோ கண்டு கொள்வது இல்லை. இதே வளாகத்தில் கல்வித் துறைக்கு சொந்தமான ஒரு ஜீப் இதே போல் கண்டு கொள்ளாமல் விட்டதால், தற்போது மண்ணுக்கு உரமாகிக் கொண்டிருக்கிறது.
அதே நிலைமை அறிவியல் லேபுக்கும் வரும்முன் உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம். தனியாக ஓட்டுனரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தனியார் ஓட்டுனரை நியமிப்பதற்கான மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
