சுதந்திர தின கலை நிகழ்ச்சியில் "கட்சி" சால்வையுடன் மாணவன்
சுதந்திர தின கலை நிகழ்ச்சியில் "கட்சி" சால்வையுடன் மாணவன்
UPDATED : ஆக 17, 2013 12:00 AM
ADDED : ஆக 17, 2013 10:31 AM
விருதுநகர்: விருதுநகரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில், தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியில், அரசியல்வாதி வேடத்தில் வந்த மாணவர் ஒருவர், கட்சி "சால்வை" அணிந்து வந்தார்.
விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில், நேற்று முன்தினம், கலெக்டர் ஹரிஹரன் தலைமையில், சுதந்திர தினவிழா நடந்தது. பள்ளிகள் சார்பில், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்து, தனியார் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சி நடத்தினர். மாணவர்களில் ஒருவர், கட்சி "சால்வை" யுடன், அரசியல்வாதி வேடத்தில் நடித்தார். இதைக் கண்ட, கலெக்டர், எஸ்.பி., திகைத்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், தனிப்பிரிவு போலீசார், "இது போன்று மாணவர்களை நடிக்க செய்ய, அனுமதி அளித்தது யார்?" என, கல்வித் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், "பள்ளியில் நடந்த பயிற்சியின் போது, "சால்வை" அணிந்து நடிக்கவில்லை. இது, திட்டமிட்டு நடக்கவில்லை. இது போன்று நடக்காமல் இருக்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்றார்.
